2016 சுட்டெரிக்கும்: உலக வானிலை மையம் தகவல்!

உலகம் முழுவதும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் அல்லல்படும் நேரத்தில், இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு வெயில் மேலும் அதிகரித்து சுட்டெரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா., அமைப்பின், டபிள்யூ.எம்.ஓ., என்னும் உலக வானிலை மையம் ஜெனீவாவை
தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த உலக வானிலை மையம், ஆண்டுதோறும் பதிவாகும் வெப்பநிலையின் சராசரியை கணித்து, அதற்கான காரணங்களையும் வெளியிடும்.சுற்றுச்சூழல் மாற்றங்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், ஐ.நா., அமைப்பின் சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான மாநாடு நடைபெறவுள்ளது. ௧௨ நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், 145க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில், சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதற்கான காரணிகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து நிபுணர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டுக்காக, உலக வானிலை ஆய்வு மையம், 2015ம் ஆண்டு, ஜன., முதல் அக்., வரையிலான வெப்பநிலையை பதிவு செய்ததில், பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை, 19ம் நுாற்றாண்டின் மத்தி யில் நிலவிய வெப்பநிலையை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.,வின் உலக வானிலை மைய தலைவர் மைக்கேல் ஜெராடு கூறியதாவது:நடப்பு ஆண்டில் பதிவான அதிக வெப்பநிலையால், 2015 மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. குறிப்பாக பெருங்கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை, வரலாற்றிலேயே முதல் முறையாக மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ௧௦ மாதங்களில் நிலவிய வெப்பநிலையை பார்க்கும்போது, நிலம் மற்றும் கடலின் வெப்பநிலை மேலும் உச்சகட்டத்தை அடையும்.
மத்திய கிழக்கு நாடுகள்கடந்த ஆண்டும் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. அடுத்த ஆண்டு, 'எல்-நினோ' காரணமாக, கடல் மட்டத்தின் மேற்பரப்பு அதிகளவில் சூடேறும்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் பதிவான கடல் நீரின் வெப்பநிலை, 1993ம் ஆண்டு, செயற்கை கோள் மூலம் கிடைத்த தகவலுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம்.
உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பில் சீனா முதலிடத்திலும், ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது. அனல் காற்றின் தாக்கத்தில், இந்தியா, பாக்., ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.
பெருங்கடல்களின் மேற்பரப்பு மட்டுமல்லாமல், ஆழத்தில் உள்ள தண்ணீரும் சூடாகிறது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பெருங்கடல்களின் மேற்பரப்பில் இருந்து 700 மீ., ஆழத்திலும், ஆழ்கடலில் 2,000 மீ., ஆழத்திலும் நிலவிய வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.
கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்று சொல்லப்படும், கார்பன் - டை ஆக்சைடு, மீத்தேன், ஓசோன் போன்றவற்றின் அதிகரிப்பால், பருவநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, உலக நாடுகளிடையே இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. முதலாவது, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவது. மற்றொன்று, உலக அளவில் வெப்பநிலை அதிகரிப்பு இரண்டு டிகிரி செல்சியசுக்கு மிகாமல் தடுக்க வேண்டும். இதனை செய்வதற்கு நம்மிடம் தேவையான அறிவாற்றலும், வழியும் உள்ளது. ஆனால், எதிர்கால சந்ததியினரிடம் இதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு மைக்கேல் ஜெராடு கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...