ஆசிரியர்கள் போராடும் வரை பொறுத்து இருந்திருக்க வேண்டியதில்லை,நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும்!

குழந்தைகளை பெற்றது தாய்–தந்தையாக இருந்தாலும் அவர்களை சிறந்த பிள்ளைகளாக செதுக்கி ஆளாக்குவது ஆசிரியர்கள்.

எனவே தான் ஆசிரியர்கள் தெய்வத்துக்கு இணையாகவும், 2–வது பெற்றோர் என்றும் போற்றப்படுகிறார்கள். சமூகத்தில் சாதாரணமாக தெரியும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை வேறு எந்த உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் கூட கிடைக்காது என்றே சொல்ல வேண்டும். ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் தனது கடைசி காலம் வரை தனக்கு
பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதைவிட கவுரவம் என்ன இருக்கிறது?

எவ்வளவு பணம்? எத்தனை விருதுகள் கொடுத்தாலும் ஆசிரியர்களின் பெருமைக்கு ஈடாகாது. அவர்களால் உருவாக்கப்பட்ட மனிதர்களின் மனங்களில் அவர்கள் என்றும் தெய்வங்களாக கொலுவிருப்பார்கள்.

உடலை வளர்ப்பவர்கள் பெற்றோர். ஆனால் உள்ளத்தையும் உணர்வுகளையும் நெறிப்படுத்தி நிமிர்ந்து வாழ வைப்பவர்கள் ஆசிரியர்கள்.

மாணவ பருவத்தில் செய்யும் தவறுகளை கண்டித்து திருத்துவார்கள். படிக்கும் காலம் படிப்பதற்கே! போராடுவதற்கு அல்ல! வாழ்க்கையை போராட்ட களமாக்காதே! வசந்தமாக்கு! என்று சொல்லித் தருபவர்கள்.

இன்று அதே ஆசிரியர்கள் போராட்ட களத்தில்...!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம்! புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்! ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும்! என்பது உள்ளிட்ட கோஷங்களுடன் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் போராட்டம்! ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் கைது! ஸ்தம்பித்து போனது பள்ளிகள். மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது பற்றி ஆசிரியர் சங்கங்கள் யோசித்து கொண்டிருக்கின்றன.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் போராட்டம் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஏற்கனவே மழை வெள்ளத்தால் ஒரு மாதம் விடுமுறை– புத்தகங்களை இழந்து அரசு வழங்கிய முக்கிய கேள்விகளின் தொகுப்புடன் மாணவர்கள் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் சூழ்நிலை! நெருங்கி வரும் தேர்தல்! இந்த நெருக்கடியான கால கட்டத்தில் படிப்பதற்கே மாணவர்கள் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஆசிரியர்களின் போராட்டம் அவர்களை மேலும் தடுமாற வைக்கும் என்பதை ஆசிரியர்களும் மறுக்க மாட்டார்கள்.

அழுத பிள்ளை தான் பால்குடிக்கும் என்ற ரீதியில் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க ஆசிரியர்கள் ரோட்டுக்கு வந்து இருக்கிறார்கள். பள்ளிகளுக்கு பூட்டுபோடும் புதுமையான போராட்டங்களும் நடக்கின்றன. பூட்டை திறந்து வெளிச்சத்தை தருபவர்கள் தான் ஆசிரியர்கள். பள்ளிகளை பூட்டுவது அவர்களின் போராட்டத்துக்கு பெருமை சேர்க்காது.

ஒருவேளை எட்டு மணி நேரத்துக்கு பதில் பதினாறு மணி நேரம் பள்ளியிலேயே இருப்போம். பாடம் நடத்துவோம் என்ற புதுமையான போராட்டத்தை நடத்தினால் அது பேசப்படும்.

ஆசிரியர்கள் போராடுவதும், அந்த போராட்டத்தை முறியடிக்க அரசு நடவடிக்கை எடுப்பதும் போராட்ட காலங்களில் எடுக்கப்படும் வழக்கமான நடைமுறைகள் தான்.

ஆனால் ஆசிரியர்கள் போராடும் வரை பொறுத்து இருந்திருக்க வேண்டியதில்லை. எந்த போராட்டமானாலும் இறுதியில் சில நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படுவது வாடிக்கையானது தான்.

இதையே சம்பந்தப்பட்ட துறைகள் முன்கூட்டியே ஆராய்ந்து நியாயமானவற்றை செய்து இருந்தால் பிரச்சினைகள் எழாது. எதையும் காலத்தே செய்ய வேண்டும்.

சமூகத்தில் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் தங்கள் தகுதிகளையும் திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும்.

இது கம்ப்யூட்டர் யுகம். ஒவ்வொரு நாளும் புது புது மாற்றங்களை உலகம் சந்தித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மாணவர்களின் அறிவுத்தேடல் விரிவடைந்து வருகிறது. எனவே மாணவர்களின் சிந்தனைக்கு தீனி போடும் ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் ஆசிரியர்கள் கேள்வி கேட்பதற்கு பதில் மாணவர்களே கேள்வி கேட்டு மடக்கி விடுவார்கள்.

ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளில் காட்டும் உறுதியை மாணவர்களை உருவாக்குவதிலும் காட்டவேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

உங்கள் உரிமை போராட்டம் மாணவர்களின் படிப்புரிமையை பாழ்படுத்திவிடகூடாது. கோரிக்கைகள் எப்போது வேண்டுமானாலும் நிறைவேறும். ஆனால் படிப்பு அப்படி அல்லவே!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...