சிறப்புக்கட்டுரை: கணக்கு ஆசிரியர் மில்லியனர் ஆன வரலாறு !

கணக்கு ஆசிரியராக மாம்பலத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த பச்சமுத்து, பொறியியல் படிப்பில் சேர விரும்பிய மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பைத் தொடங்கினார். அதன் கிளைகள் சென்னையிலும் சேலத்திலும் பரவி தழைத்தோங்கி வளர்ந்தன. இந்நிலையில்தான் 1965இல் சென்னை கே.கே.நகரில் ‘பிளாரன்ஸ்
நைட்டிங்கேல்’ ஆரம்பப்பள்ளியைத் தொடங்கினார். இந்தப் பள்ளி பன்னிரண்டு ஆண்டு கால வளர்ச்சியில் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது.

இந்நிலையில்தான் பிரபல சினிமா நட்சத்திரமும் அரசியல்வாதியுமான எம்.ஜி.ராமச்சந்திரனோடு தன்னை இணைத்துக் கொண்டார் பச்சமுத்து. 1972இல் திமுக-விலிருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை நிறுவினார் எம்.ஜி.ஆர். புதிதாக தொடங்கப்பட்ட அதிமுக, 1977இல் சட்டமன்ற தேர்தலைச் சந்தித்து ஆட்சியில் அமர்ந்தார் எம்.ஜி.ஆர். ‘எம்.ஜி.ஆரின் எழுச்சியிலிருந்து தன் ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துக் கொண்டார் பச்சமுத்து’ என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதுண்டு. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அவரது அரசு, புதிதாக தொடங்கப்பட்ட தனியார் கல்லூரிகளை ஊக்குவித்தது. பச்சமுத்துவின் உறவினர்கள் அதிமுக-வில் அப்போது இருந்தனர். குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த கோவைதம்பி, பச்சமுத்துவின் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். பொத்தேரி பகுதியில் இருந்த அரசு நிலத்தை நீண்டகால குத்தகைக்கு பச்சமுத்து எடுத்து, எஸ்.ஆர்.எம். கல்லூரியை தொடங்கக் காரணமாக இருந்தவர் கோவை தம்பிதான் என்கிறார்கள் பச்சமுத்துவுக்கு நெருங்கிய நண்பர்கள். பச்சமுத்து சொந்தமாக நிலம் வாங்கி அரசிடம் குத்தகைக்கு எடுத்த நிலத்தையும் இணைத்து எஸ்.ஆர்.எம். கல்லூரியைத் தொடங்கினார். அங்கிருந்து பச்சமுத்துவுக்கு அபார வளர்ச்சிதான்.

வளர்ந்தோங்கியது எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம்



1985இல் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1990இல் நர்ஸிங் மற்றும் மருந்தியல் கல்லூரியும் தொடங்கப்பட்டது. 1993-94இல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கலைக்கல்லூரியும் தொடங்கப்பட்டது. 2002இல் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது. இன்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசம், சிக்கிம் மற்றும் நொய்டாவில் தன் கல்லூரிகளை தொடங்கும் அளவுக்குச் சக்தி படைத்ததாக உயர்ந்துவிட்டது.

பச்சமுத்துவின் பல்வேறு தொழில்களை அவரும் அவரது மகன்களும் கவனித்து வருகிறார்கள். பணப்பரிவர்த்தனை தொடர்பான தொழில்களை பச்சமுத்துவின் மூத்த மகன் ரவி பச்சமுத்து கவனித்து வருகிறார். போக்குவரத்து, ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை பச்சமுத்து கவனித்து வந்தார். அவரது இளைய மகன் சத்தியமூர்த்தி தொலைக்காட்சி மற்றும் மென்பொருள் தொழில்களை கவனித்து வருகிறார்.

2010இல் இந்திய ஜனநாயகக் கட்சியை தொடங்கினார் பச்சமுத்து. மேலும், ரூபாய் 200 கோடி முதலீட்டில் ‘புதிய தலைமுறை’ என்ற புதிய தொலைக்காட்சியைத் தொடங்கினார். கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தொழிலில் கிடைத்த பெருவாரியான வருமானத்தைக் கொண்டு திரைப்பட விநியோகத்தையும் தொடங்கினார் பச்சமுத்து.

அப்போதுதான் இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தார் மதன். ‘வேந்தர் மூவிஸ்’ என்றும் பின்னர் ‘பாரிவேந்தர்’ என்ற பெயரிலும் திரைப்பட தாயாரிப்பு கம்பெனியை தொடங்கினார் மதன். பாரிவேந்தர் என்பது பச்சமுத்துவின் இன்னொரு பெயர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் திரைப்பட விநியோகம் செய்து வந்த அவர்கள், பின்னர் திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கினர். லிங்கா மற்றும் சில வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்தது.

பிரச்னை தொடங்கியது.



எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு இடம் கொடுக்க பெரும் தொகையை கேட்பதாக சில மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து 2013இல் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், ‘மருத்துவக்கல்லூரியில் மாணவர்களிடம் பணத்தை நேரடியாக வசூலிப்பதில்லை. இடைத்தரகர்களிடம் பணத்தை செலுத்திவிட்டால் அவர்கள் ஒரு துண்டு பேப்பரில் ஒரு குறியீட்டு எண்ணைக் குறித்து கொடுப்பார்கள். அந்த துண்டுக் காகிதத்தைக் கல்லூரியில் கொடுத்தால் அந்த மாணவருக்கு இடம் கிடைக்கும்’ என்று எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள். எஸ்.ஆர்.எம். நிறுவனத்தைப் பொறுத்தவரை மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தரும் இடைத்தரகராக மதன் இருந்திருக்கிறார். இடையில் என்ன நடந்ததோ… மதனுக்கும் பச்சமுத்துவுக்கும் குறிப்பாக அவரது மூத்த மகன் ரவி பச்சமுத்துவுக்கும் இடையே மனக்கசப்பு உண்டாகியிருக்கிறது.

மருத்துவக்கல்லூரியில் சேர ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்துதான் எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரிக்கு பிரச்னை தொடங்கியது. கடந்த ஜுன் இரண்டாம் தேதி மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ரூபாய் 72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் மீதும் மதன் மீதும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பே மதன் மே 27ஆம் தேதி மதன் மாயமாகிவிட்டார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோர்கள் அளித்த புகார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பச்சமுத்துவிடம் ஏன் போலீஸ் விசாரணை செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பினர்.

இதையடுத்துதான் வழக்கில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரை சென்னை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 406, 34, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.