மாணவர்களே இல்லாத பள்ளி: தூங்கும் தலைமை ஆசிரியர் !

ஒட்டன்சத்திரம் அருகே, அரசு தொடக்க பள்ளியில், மாணவர்கள் இல்லாததால், தலைமை ஆசிரியர் வகுப்பறையை தாழிட்டு துாங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், ஆலயக்கவுண்டன்பட்டியில், 1989 முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
செயல்படுகிறது. இரண்டு மாணவர்கள் மட்டுமே படிப்பதாக வருகை பதிவேட்டில் உள்ளது. ஆனால், அவர்களும் இப்பள்ளிக்கு வருவது இல்லை. ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் பணியில் உள்ளனர். உதவி ஆசிரியர் அயற்பணியில் (டெபுடேஷன்) வேறு பள்ளிக்கு சென்று விட்டார். தலைமை ஆசிரியர் ராமராஜ் மட்டுமே உள்ளார்.



துாங்கிய ஆசிரியர் : நேற்று மதியம், 12:00 மணிக்கு பள்ளியில், இரண்டு வகுப்பறைகளில் ஒன்று பூட்டப்பட்டு இருந்தது. மற்றொரு வகுப்பறையில், உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உள்ளே தலைமை ஆசிரியர் ராமராஜ் துாங்கி கொண்டிருந்தார்.



இது குறித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகேசன் கூறுகையில், ''பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி எடுக்கிறோம். ''இரண்டு பேர் மட்டுமே படிப்பதால், இரண்டு ஆசிரியர்களில் ஒருவர், வேறு பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மாற்று ஆசிரியர் இல்லாததால் ஒரு ஆசிரியரும் மதிய உணவுக்கு சென்றபோது, பள்ளி பூட்டப்பட்டு இருக்கலாம்,'' என்றார்.