ரெயில் பயணிகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் காப்பீடு திட்டம் அமலுக்கு வந்தது*

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் ரெயில் பயணிகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம்வரை காப்பீடு வழங்கும் திட்டம் நேற்று அமலுக்கு வந்தது. 3 காப்பீட்டு நிறுவனங்களுடன்

இணைந்து ஐ.ஆர்.சி.டி.சி. இத்திட்டத்தை அமல்படுத்துகிறது. புறநகர் ரெயில் பயணிகளை தவிர, அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்த காப்பீட்டு வசதி அளிக்கப்படுகிறது.

உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்.ஏ.சி. டிக்கெட், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் என எல்லா டிக்கெட் வைத்திருப்போருக்கும் இது பொருந்தும். ஆனால், டிக்கெட்டை ரத்து செய்தால், பிரிமியம் தொகையான 92 காசு, திருப்பித் தரப்படமாட்டாது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், வெளிநாட்டு குடிமகன்களுக்கும் காப்பீட்டு வசதி பொருந்தாது. ரெயில் விபத்தின்போது முழுமையான ஊனம் ஏற்பட்டால் பயணிக்கும், மரணம் ஏற்பட்டால் அவருடைய நியமனதாரருக்கோ, வாரிசுதாரருக்கோ ரூ.10 லட்சம் வழங்கப்படும். பகுதி அளவு ஊனம் ஏற்பட்டால், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.