தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5 மணி முதல் 10 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. இதனால், தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில்
கடந்த சில நாட்களாக மின்வெட்டு நேரம் திடீரென அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தினமும் 8 மணி முதல் 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் காற்றாலைகள் முறையாக இயங்கும்போது சில வேளைகளில் மின் தட்டுப்பாடு கட்டுக்குள் இருப்பது வழக்கம். ஆனால் தற்பொழுது மீண்டும் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. இங்கு பகலில் 5 மணி நேரம்,
இரவில் 3 மணி நேரம் என நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ள நேரத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இரவில் மின்சாரம் தடைபட்டவுடன் கொசுக்கள் படையெடுப்பால் நிம்மதியாக தூங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். கோவையில் கடந்த 2 நாட்களாக காலை, மாலை என்று தினமும் 2 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால், பம்ப்செட் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில் முனைவோர் தவிப்படைந்துள்ளனர்.
திருச்சியில், தொட்டியம், அரியலூரில் காடுவெட்டி ஆகிய பகுதிகளில் பகலில் 3 மணி நேரம், இரவில் 2 மணி நேரம் என 5 மணி நேரம் மின்வெட்டு தொடர்கிறது. துறையூரில், காலை, மாலை, இரவு என்று 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவையாறு பகுதியில் பகலிலும், இரவிலும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை இருந்து வருகிறது. நகர்புறங்களில் 5 மணி நேரமும், கிராமப்புறங்களில் 10 மணி நேரம்வரையும் மின்தடை ஏற்படுகிறது. இதனிடையே, வரும் 26ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது. இந்த நேரத்தில் மின்தடை அதிகமாகி உள்ளதால் மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுபோல வர்த்தகர்களும், பெண்களும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஜெனரேட்டர் வசதி இல்லாத சிறு, குறு வியாபாரிகள் மாலையில் மின்வெட்டு ஏற்பட்டவுடன் கடைகளை பூட்டிவிட்டு சென்று விடுகிறார்கள்.
கைவிட்டது காற்றாலை: தமிழகத்தில் மொத்த மின்சார தேவை 12,799 மெகாவாட் ஆகும். கடந்த சில நாட்களாக காற்று இன்மையால் மின் உற்பத்தி மிகவும் குறைந்தது. நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 202 மெகாவாட்டாகவும், நேற்று அதிகாலை 40 மெகாவாட்டாகவும் குறைந்தது. இதனால், 10,615 முதல் 10,971 மெகாவாட் வரை மட்டுமே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், இன்னும் 10 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.