டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை !

ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்!!!

21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்தால், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு


சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் கே.பாலு என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மது குடிக்கும் பழக்கத்தை குறைத்தல், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்தல், மதுவின் தீமைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மது விற்பனையை கட்டுப்படுத்துதல் போன்ற பல திட்டங்களை உருவாக்கவேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை அமல்படுத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.

குழு அமைப்பு

இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை அமல்படுத்த குழு ஒன்றை கண்டிப்பாக அமைக்கவேண்டும் என்று கடந்த ஜூன் 17-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மதுவிலக்கு துறை ஆணையர் கிர்லோஷ் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்த ஐகோர்ட்டு கடந்த ஜூன் 17-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து கடந்த ஜூன் 30-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்த குழுவின் தலைவராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் (நான்) உள்ளேன். போக்குவரத்து ஆணையர், கூடுதல் டி.ஜி.பி., கூடுதல் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுத்தல், குடும்ப செலவுக்கான தொகை மதுக்கடைகளுக்கு செல்வது குறித்து ஆய்வு செய்தல், மதுவினால் அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளவேண்டும்.

இதுதவிர, இந்த பணிகளை சமூக சேவையில் ஈடுபடும் அமைப்புகள் மூலம் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை 27-ந் தேதி, ஆகஸ்டு 4 மற்றும் 11-ந் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில் மனநல டாக்டர்கள், சமூக சேவகர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

அறிக்கை

இந்த 3 கூட்டங்களிலும், கலந்து கொண்டவர்கள், மதுவினால் ஏற்படும் தீமைகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த ஆலோசனையின்படியும், அண்டை மாநிலங்களில் மது தொடர்பாக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்தும் ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாத காலஅவகாசத்தை இந்த ஐகோர்ட்டு வழங்கவேண்டும்.

மேலும், இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடும் நடவடிக்கை

அந்த சுற்றறிக்கையில், டாஸ்மாக் மதுக்கடையில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மது குடிக்க அனுமதித்த பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பார் உரிமையும் ரத்து செய்யப்படும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்று அறிவிப்பு பலகையை பெரிய அளவில் மதுக்கடைகளுக்கு முன்பு வைக்கவேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது வாங்க கடைக்கு வந்தால், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு மதுக்கடை ஊழியர்கள் உடனே தகவல் தெரிவிக்கவேண்டும். மது வாங்க வரும் நபரின் வயதில் சந்தேகம் இருந்தால், அவரிடம் அடையாள அட்டையை வாங்கி சரி பார்க்கவேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.காலஅவகாசம்

எனவே, இந்த மனுவை ஏற்றுக்கொண்டு, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாத காலஅவகாசத்தை வழங்கவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...