விற்பனையாகாமல் உள்ள பொருட்களில் ஜிஎஸ்டிக்கு பிந்தைய அதிகபட்ச விலை
பட்டியலை ஒட்ட வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அளித்த பேட்டி: பொருட்கள் மீது விலைபட்டியலை ஒட்டாத நிறுவனங்கள் மீது ரூ.1 லட்சம் வரை அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும். பொருட்களை வரும் செப்டம்பருக்குள் விற்பனை செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டியில் நுகர்வோர் பிரச்னைகளை தீர்க்க, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக உதவி எண்கள் 60 ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 14 எண்கள் வரி தொடர்பான பிரச்னைகள் தீர்க்க அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 700 புகார்கள் வந்துள்ளன. இதனை தீர்க்க நிதியமைச்சகம் உதவி கோரப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது சில பிரச்னைகள் ஏற்படும். ஆனால், அவை விரைவில் சரி செய்யப்படும். நிதி, நுகர்வோர் விவகாரத்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களும் பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் சில பொருட்கள் விலை குறைந்துள்ளன. சில பொருட்கள் விலை ஏறியுள்ளன.
விற்பனையாகாமல் இருக்கும் பொருட்களில், அதிகபட்ச விலை அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலை மாற்றம் குறித்து நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும்.
இதனை செய்யாத உற்பத்தியாளர்கள் மீது முதல் முறை ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை ரூ. 50 ஆயிரம் அபராதமும், மூன்றாவது முறை ரூ. 1 லட்சத்துடன் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்