வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபிஏடி எனப்படும் ரசீது இயந்திரம் பொருத்தப்பட
வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தாங்கள் வாக்களித்த சின்னத்துக்குத்தான் வாக்குப் பதிவாகியுள்ளதா என்ற குழப்பம் நீண்ட நாள்களாகவே வாக்காளர்கள் இடையே நிலவி வருகிறது. இதற்கிடையே எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்குப் பதிவாகும்படி முறைகேடு செய்ய முடியும் என்றும், பல்வேறு தேர்தலில் அவ்வாறு வாக்குகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இதற்குத் தீர்வு காணும் விதமாக, தாங்கள் செலுத்திய வாக்கை வாக்காளர்கள் சரி பார்க்கும் விவிபிஏடி கருவிகளை இணைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அபிடவிட் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், அடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் விவிபிஏடி பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்து உள்ளது.
மேலும், குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், வாக்காளரின் ஓட்டுப் பதிவானதை உறுதி செய்யும் விவிபிஏடி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் உறுதி செய்திருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையை இன்றைக்கு (ஆகஸ்ட் 10) ஒத்தி வைத்தது. முன்னதாக, தேர்தல்களில் விவிபிஏடி இயந்திரங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கடந்த மே மாதமே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த இயந்திரங்களை வாங்க நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடமும் வேண்டுகோள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
