பருவநிலை மாற்றத்தால், ஆசிய நாடுகளில், அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது; இதில், சென்னை மாநகரும்
அடங்கும்' என, ஜெர்மன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மன் நாட்டில் இயங்கும், 'போட்ஸ்டேம்' என்ற, பருவநிலை மாற்றத்துக்கான ஆய்வு நிறுவனம், 2050ம் ஆண்டு வரையிலான முன் கணிப்பு ஆய்வுகளை மேற்கொண்டது.
அதில், கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், ஆசிய நாடுகளில் அதிக வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், போதிய மழை இருக்காது. ஆனால், இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்படும்.
மழை பெய்யும் நாட்கள் குறைவாக இருந்தாலும், மழை அளவு அதிகமாக இருக்கும். அதனால், மழைநீரை சேமித்து வைப்பதில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், பொருளாதார அளவில் பாதிப்பு ஏற்படும்.
சென்னை, கோல்கட்டா, மும்பை, சூரத் போன்ற நகரங்கள், பொருளாதார இழப்புக்கு ஆளாகலாம். 2005 முதல், 2050 வரையில், அதிக பொருளாதார இழப்பு ஏற்படும் நகரங்களில், இந்த நான்கு நகரங்களும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை, அக்., 10 முதல், 25க்குள் துவங்கும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வானிலை அதிகாரிகள் கூறுகையில், 'பருவநிலை ஒவ்வொரு நாளும் மாறும். ஒரு வாரத்துக்கான முன் கணிப்பு அறிக்கைகளே மாறலாம். அதனால், 30 ஆண்டுகளுக்கான கணிப்புகள் துல்லியமாக இருக்காது' என்றனர்