நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம்
கடந்த மாரச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கு அருகே 500 மீட்டர் சுற்றளவில் இருந்த 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், மாநகரங்களில் உள்ள நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகளாக மாற்றி அறிவிக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. அப்படி மாற்றிவிட்டால், நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என்னும் உத்தரவு இந்தச் சாலைகளில் செல்லாது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதி அருகே மதுபான கடை திறக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 14) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுபானக் கடை திறக்கக் கூடாது. அதேபோல, குடியிருப்புப் பகுதி அருகிலும் மதுபானக் கடை திறக்கப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிதா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குடியிருப்புப் பகுதி அருகே மதுபானக் கடை திறக்கக் கூடாது என்று தமிழ்நாடு மதுபானச் சில்லறை விற்பனை விதியில் எதுவும் இல்லை என்பதால், இதற்குத் தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். குடியிருப்புப் பகுதிகள் அருகே மதுபானக் கடைகள் திறக்கத் தடை விதிப்பதற்கான சட்டத்தை நீதிமன்றத்தால் இயற்ற முடியாது. அது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
