அதிமுகவில் வைத்திலிங்கம், ஆர்.பி.உதயகுமாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3
அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்து தினகரன் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த பதவிகளுக்கு புதிதாக தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க அமைச்சர்களுக்கு தினகரன் வழங்கிய அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி புதிய நிர்வாகிகளை அறிவித்தார். தொடர்ந்து தினகரனை நீக்கம செய்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே கடந்த 21 ஆம் தேதி அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. சசிகலாவை நீக்க பொதுக்குழு கூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை நடத்திய பின்னர், நேற்று ஆளுநரிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று கடிதம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தினகரன் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். அதன் முதற்கட்டமாக நேற்று( ஆகஸ்ட்-22) அமைப்பு செயலாளர் வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மற்றும் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜன் செல்லப்பா உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், இன்றே( ஆகஸ்ட்-23) இரண்டாவது முறையாக பல்வேறு மாவட்டச் செயலாளர்களை நீக்கியும், அந்த இடத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,' கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விருகை வி.என்.ரவி விடுவிக்கப்படுகிறார். அந்த பொறுப்பில் ஜி.செந்தமிழன் நியமிக்கப்படுகிறார். இதற்கு முன்னர் வகித்து வந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஜி.செந்தமிழன் விடுவிக்கப்படுகிறார். திருவாரூர் மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆர் .காமராஜ் விடுவிக்கப்பட்டு, எஸ்.காமராஜ் அந்த பதவியில் நியமிக்கப்படுகிறார். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பலராமன் நீக்கம் செய்யப்பட்டு ஏழுமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த வந்த அமைச்சர் கே.சி.வீரமணி அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியம் புதிய செயலாளராக நியமிக்கப்படுகிறார். புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வைரமுத்து விடுவிக்கப்படுகிறார் அவருக்கு பதிலாக அந்த பதவியில் கார்த்திகேயன் நியமனம் செய்யப்படுகிறார்' ' இந்த நிர்வாகிகள் பட்டியல் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு வெளியிடப்படுகிறது' என்று தன்னுடைய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்
