பணிமூப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்தை
ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராகப் பணிபுரிந்த டாக்டர் கீதாலட்சுமி, 2015 டிசம்பரில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் ஆர். விமலா, மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்தை ரத்து செய்து, அனைத்து தகுதிகளும் உள்ள தன்னை இயக்குநராக நியமிக்க உத்தரவிடக் கோரி, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் எஸ். ரேவதி கயிலைராஜன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட வேண்டிய பட்டியலில் உள்ளவர்களின் தகுதி, திறமையை கருத்தில் கொள்ளாமல், ஆரம்பம் முதலே விமலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். விதிகளின்படி பார்க்கையில், விமலாவின் நியமனம் தகுதிப்படி நடைபெறவில்லை. இப்பதவி வகிப்பதற்கு தகுதியும், திறமையும் அவசியம்.
இருப்பினும், அவர் மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி வகித்து பின்னர் ஓய்வும் பெற்றுவிட்டார். இதனால், மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. தற்போது, மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி காலியாக இருப்பதால், அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர் என்று நம்புகிறோம் என்று கடந்தாண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பின்னர், கோவை அரசு மருத்துவமனை டீனாக இருந்த எட்வின் ஜோ, மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்தும் ரேவதி கயிலைராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். அதில், எட்வின் ஜோ தன்னை விட 7 ஆண்டுகள் பணிமூப்பில் இளையவர். இதனால், எட்வின் ஜோ நியமனத்தை ரத்து செய்து, என்னை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான நபரையே தேர்வு செய்துள்ளோம் என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடர்பாக மனுதாரர் தரப்பின் வாதம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. தற்போது, தேர்வு செய்யப்பட்டுள்ள நபரை விட மனுதாரர் பணிமூப்பு அடிப்படையில் மூத்தவர் என்பது தெளிவாகிறது. இருப்பினும், அதிகாரிகள் மனுதாரரை தவிர்த்து மற்றொருவரைத் தேர்வு செய்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இதன்படி பார்க்கையில், தற்போது மருத்துவக் கல்வி இயக்குநராக உள்ள எட்வின் ஜோவின் நியமனம் விதிகளின்படி நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, அவரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் ரேவதி கயிலை ராஜனை உடனடியாக மருத்துவக் கல்வி இயக்குநராக நியமித்து, சுகாதாரத் துறைச் செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்