தங்கப் பதக்கத்தில் பாய்ந்த ஈட்டி!
பிரான்ஸில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பிரான்ஸில் டி சோட்டேவில்லெ-லெஸ்-ரூயெனில் தடகள போட்டிகள் நடக்கின்றன. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சார்பாக இளம் முன்னணி வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். அதில் நேற்று (ஜூலை17) நடைபெற்ற போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற மால்டோவாவின் ஆண்டிரியன் மார்டாரேவைவிட, 3.69 மீட்டர்கள் அதிக தூரம் வீசி, அதாவது 85.17 மீட்டர் தூரம் வீசி இந்தத் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்.
ஐந்தாவது முயற்சியில் இந்த இலக்கைத் தொட்ட நீரஜ் சோப்ராவுக்கு 3ஆவது முயற்சியில் வீசிய 85.12 மீட்டர் தூரமே முதல் இடத்தினைப் பெற போதுமானதாக இருந்தது. இதில் லிதுவேனியாவின் எடிஸ் மாடுசெவிசியஸ் 79.31 மீட்டர் வீசி வெண்கலப்பதக்கம் வென்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான டிரினிடாட் அண்டு டுபாகோவின் கெஸ்ஹார்ன் வால்கோட் 78.26 மீட்டர் தூரம் மட்டுமே வீசி ஐந்தாவது இடம் பெற்றார்.
இதில் 85.12 மீட்டர் தூரம் வீசியிருந்தாலும் நீரஜ் சோப்ராவின் ஒட்டுமொத்த அதிகபட்ச தூரமானது, ஐஏஏஎஃப் டைமண்ட் லீக்கில் 87.43 மீட்டர் தூரம் வீசி தேசிய சாதனை படைத்திருந்த அந்த தூரமேயாகும். அதை இன்னும் அவர் முறியடிக்கவில்லை.
முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு 86.47மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வாங்கிய நீரஜ் சோப்ரா தற்போதும் தங்கப்பதக்கம் வாங்கியிருப்பதால் அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
