கடன் தள்ளுபடி, கரும்புக்கு உரிய பணம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் மொத்த நகரையும் ஸ்தம்பிக்கவைத்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பதஞ்சலியிலிருந்து இந்திய விவசாயி சங்கம் சார்பில் `கிஸான் கிராந்தி யாத்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள பேரணி தொடங்கியது. கடன் தள்ளுபடி, நிலுவைத்தொகை வழங்குதல், கரும்புக்கு உரிய பணம், சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் போன்ற 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பதஞ்சலி முதல் டெல்லியில் உள்ள கிஸான் காட் வரை பேரணி நடத்தபட்டுவருகிறது.
டிராக்டர்கள், பிற வாகனங்கள் என 20,000 விவசாயிகள் நேற்று மாலை உத்தரபிரதேசம் மாநிலம் காஸியாபாத் வழியாக டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தினர். இன்று காலை அவர்கள் டெல்லி- உத்தரபிரதேசம் எல்லையை அடையும் முன்பே அவர்கள் அனைவரும் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகளில் பேரணியால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியை நோக்கி முன்னேறி வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீர் பாய்ச்சி கூட்டத்தைக் கலைத்து வருகின்றனர். `நாங்கள் என்ன தீவிரவாதிகளா?. எங்களை உள்ளே விடுங்கள்’ என கோஷத்துடன் விவசாயிகள் கலைய மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வாகனங்களை விட்டு இறங்கி நடந்து செல்ல முயலும் விவசாயிகளை பேரிகாடுகள் வைத்து போலீஸார் தடுத்து அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இதனால் அந்த இடம் பரபரப்புடன் காணப்படுகிறது.
