நம்மில் பலர் பள்ளிக்குச் செல்வதற்காகப் பாலத்தைக் கடந்து இருப்போம். ஆனால், டெல்லியில் பாலத்துக்குக் கீழே ஒரு
திறந்தவெளிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மெட்ரோ ரயில் பாலத்தையே கூரையாகக்கொண்ட அந்தப் பள்ளியை நடத்திவருகிறார், 40 வயது ராஜேஷ் குமார் ஷர்மா. கூலித் தொழிலாளி, விவசாயி, ஆட்டோ டிரைவர் போன்றவர்களின் குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள்.
ஷாகர்பூர் என்ற ஊரில் மளிகைக் கடை நடத்திவரும் ராஜேஷ் குமார், தனது வறுமைநிலை காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர். தினமும் தனது கடைக்குச் செல்லும் வழியில் தெருவோரம் விளையாடும் சிறுவர்களைக் காணும்போது, 'இப்படி பள்ளிக்குச் செல்லாமல் எதிர்காலத்தைத் தொலைக்கிறார்களே’ என மனம் வருந்தினார்.
அவர்களின் பெற்றோரிடம், 'உங்கள் குழந்தைகளை என்னிடம் படிக்க அனுப்புங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படித் திரட்டிய மாணவர்களைக்கொண்டு, இரண்டு வருடங்களாகப் பாலத்துக்குக் கீழே, வாரத்துக்கு ஐந்து நாட்கள் பள்ளியை நடத்துகிறார். மளிகைக் கடையில் வேலை இருக்கும்போது, இவரது தம்பி பள்ளியைப் பார்த்துக்கொள்வார்.
இப்போது இந்தப் பள்ளிக்குத் தினமும் 50 மாணவர்கள் தவறாமல் வருகிறார்கள். காலையில் தரையைச் சுத்தப்படுத்துவது, கரும்பலகையைத் துடைப்பது போன்ற எல்லா வேலைகளையும் மாணவர்களே செய்கிறார்கள். இந்தப் பள்ளியைப் பற்றி தகவல் அறிந்த தன்னார்வலர்கள் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கி உதவுகிறார்கள்.
''நம் நாட்டில் வறுமையால் எந்தக் குழந்தைக்கும் கல்வி கிடைக்காத நிலை இருக்கக் கூடாது. அதற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். இங்கே படித்த 140 மாணவர்களில் 70 பேர் இப்போது வழக்கமான பள்ளிகளில் சேர்ந்துவிட்டார்கள்'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் ராஜேஷ் குமார்.
இவரும் ஒரு டியர் டீச்சர்தான்!