காலியாகும் இடங்களை நிரப்பகால்நடை மருத்துவப் பல்கலை. புதிய திட்டம்....!!

கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் ஆண்டுதோறும் அதைக் கைவிட்டு வேறு படிப்புகளுக்குச் செல்வதால், காலியாகும் இடங்களை நிரப்ப தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.


தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கென்று ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 4 அரசுக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு உள்ளது. இதுதவிர தனியார் கல்லூரிகளோ, பல்கலைக்கழகமோ இல்லை.

320 இடங்கள்: சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 80, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 60 இடங்கள் என மொத்தம் 320 இடங்கள் உள்ளன.

ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (கட்-ஆப்) நிர்ணயிக்கப்பட்டு, கலந்தாய்வின் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் பலர் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேருகின்றனர். அந்த மாணவர்கள் மீண்டும் அடுத்த ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொண்டு தாங்கள் எதிர்பார்த்த படிப்புகளில் இடம் கிடைத்துவிட்டால், கால்நடை மருத்துவப் படிப்புகளில் இருந்து 2-ஆம் ஆண்டின் போது விலகிவிடுகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகிவிடுகின்றன.

மருத்துவர்கள் குறைவு: தமிழகத்தில் உள்ள கால்நடைகளின் விகிதத்தோடு ஒப்பிடுகையில், மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், ஆண்டுதோறும் 100 இடங்கள் காலியாக இருந்தால் எதிர்காலத்தில் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இதைத் தடுக்க பல்கலைக்கழகம் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து கட்-ஆப் அடிப்படையில் இடம் கிடைக்காதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களைத் தொடர்புகொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களைத் தொடர்பு கொண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேர விரும்பினால் அவர்களுக்கு சிறப்புப் பருவம் மூலம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

சிறப்புப் பருவம்: இந்த மாணவர்களுக்கு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சிறப்புப் பருவத்தை உருவாக்கி, முதலாமாண்டு முதல் பருவத்தில் இருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். மற்ற மாணவர்களைப் போன்று விடுமுறைகள் இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. வகுப்பு நேரங்களும் சற்று அதிகரிக்கப்படும்.

வழக்கமான கால்நடை மருத்துவ அறிவியல் பாடத் திட்டங்கள் பயிற்றுவிக்கப்படும். வகுப்பு நாள்களை நெருக்குவதன் மூலம் 3 ஆண்டுகள் அதாவது 6 பருவங்கள் 2 ஆண்டுகளில் கற்றுக் கொடுக்கப்படும். இந்தச் சிறப்புப் பருவத்தில் படிக்கும் மாணவர்கள் 4-ஆம் ஆண்டு தொடக்கத்தில் சாதாரண பருவத்தில் படிக்கும் மாணவர்களோடு இணைந்துவிடுவார்கள். அப்போது ஆண்டுதோறும் காலியாகும் இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட்டுவிடும்.

மாணவர்களிடம் விளக்கம்: இந்தச் சிறப்புப் பருவத் தேர்வு முறைக்கு சம்மதம் தெரிவிக்கும் மாணவர்கள் மட்டுமே இதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்படும்போதே தமிழகத்தில் உள்ள 4 கல்லூரிகளில் எந்தக் கல்லூரியில் இடம் வழங்கப்படுகிறது என்பது தெரிவிக்கப்படும். 2 ஆண்டுகள் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்த பிறகு, 4-ஆம் ஆண்டு படிப்பை அவர்களுக்கென்று இடம் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் தொடர்வார்கள்.

இதுதொடர்பாக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறியதாவது:

இந்தப் புதிய திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். அதற்கு முன்பாக மனதளவில் அதற்கான அனைத்து முன்திட்டங்களையும் தயாராக வைத்துள்ளோம். அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் வழக்கமான கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்பாக சிறப்புப் பருவ மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, செப்டம்பரில் வகுப்புகள் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கென்று பாடம் நடத்துவதற்காக கூடுதல் ஆசிரியர்களையும் நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

இனி படிப்பைக் கைவிட்டால் ரூ. 3 லட்சம்!

கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த பிறகு அதைக் கைவிட்டால், இந்த ஆண்டில் இருந்து ரூ. 3 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த பிறகு, பல்வேறு காரணங்களால் அதை 2-ஆவது ஆண்டில் கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் குறைப்பதற்காக நிகழ் கல்வியாண்டில் இருந்து கலந்தாய்வின் மூலம் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேருவோர், படிப்பைக் கைவிட்டால் ரூ. 3 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். கால்நடை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்திலேயே இந்தத் தகவல் இந்த ஆண்டு முதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...