சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்த மாணவி அஸ்வினி என்பவர், சற்றுமுன் இளைஞர் ஒருவரால் கல்லூரி வாசலிலேயே குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் அஸ்வினி என்ற பெண் பி.காம் படிந்துவந்துள்ளார். அந்த மாணவி இன்று மதியம் கல்லூரி வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, அவரை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். காயமடைந்த மாணவி, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கத்தியால் குத்திய இளைஞரை, பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைந்தனர்.
அந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இறந்த மாணவி அஸ்வினியின் தோழிகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவம் நடந்த இடம் ரத்த சாயங்களுடன் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த சம்பவம், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட 21 வயது மென்பொறியாளர் சுவாதியின் சம்பவத்தை போலவே நிகழ்ந்துள்ளது பெரும் பீதியை கிளப்பியுள்ளது.