வாகனச் சோதனைக்குத் தற்காலிகத் தடை!


திருச்சியில் வாகனப் பரிசோதனையின்போது கீழே விழுந்து கர்ப்பிணிப் பெண் உஷா இறந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாகத் தமிழகக் காவல் துறையினர் வாகனப் பரிசோதனை செய்வதற்கும் ஸ்பாட் ஃபைன், வசூலிப்பதற்கும் தற்காலிகத் தடைபோட்டுள்ளார் டிஜிபி.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகக் காவல் துறைத் தலைவரிடமிருந்து கீழ் மட்ட அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு வந்தது. அதில், “அனைத்துக் காவல் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு நூறு வழக்குகள் பதிவுசெய்து ஸ்பாட் ஃபைன், வசூலித்துத் தலைமைக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் காவல் துறையினர் காலையிலேயே சாலையில் நின்றுகொண்டு மோட்டார் வாகனங்களை வழிமறித்து ஹெல்மெட் , லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது, ஆர்.சி. புக் இல்லாமலிருப்பது, சீட் பெல்ட் போடாமலிருப்பது, ஓவர் ஸ்பீடு, ஓவர் லோடு எனப் பல வழக்குகளைப் போட்டு ஸ்பாட் ஃபைன் வசூலித்தார்கள். இந்தச் செய்தியைத் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலம்.காமில் முன்னரே வெளியிட்டிருந்தோம்.

மண்டல ஐ.ஜி.க்கள் காலையில் எழுந்ததும் மாவட்டக் கண்காணிப்பாளர்களின் லைனுக்கு வந்துவிடுவார்கள். எஸ்.பி.களும் வழக்கு விவரங்கள், அபராதம் போட்ட தொகை என்று கணக்கு போட்டுக் கையில் வைத்துக்கொண்டு வாசிப்பார்கள்.

“டிரங்க் அண்ட் டிரைவ் கேஸ் ஏன் குறைந்தது? பக்கத்து மாவட்டத்தில் பாருங்க, எவ்வளவு வழக்கு போட்டிருக்காங்க” என்று ஐ.ஜி.க்களிடம் எஸ்.பி.க்கள் திட்டு வாங்கியதும் நடந்திருக்கிறது. இதன் விளைவாக, எஸ்.பி.க்களும் குற்ற வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டாமல்அபராதம் வசூலிப்பதில் கவனத்தைச் செலுத்திவந்தார்கள்.

இத்தகைய முனைப்பின் விளைவுகளில் ஒன்றாகவே உஷா மரணத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. திருச்சி திருவெறும்பூரில் பிப்ரவரி 7ஆம் தேதி இரவு வாகனப் பரிசோதனையின்போது போலீஸ் துரத்தியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற கர்ப்பிணிப் பெண் உஷா கீழே விழுந்து இறந்துபோனார்.

உஷா மரணத்துக்குக் காரணம் வாகனப் பரிசோதனை செய்த ஆய்வாளர்தான் என்று மக்கள் போராட்டம் வெடித்ததால், விசாரணை இல்லாமல் சம்பந்தப்பட்ட ஆய்வாளரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள். இது ஒட்டுமொத்தக் காவல் துறையினரையும் அதிரவைத்துள்ளது. வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் இதர ஊடகங்களிலும் காவல் துறை அதிகாரிகளைப் பற்றியும் ஆட்சியாளர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில்தான் மார்ச் 8ஆம் தேதி காலையில் அனைத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவுவந்திருக்கிறது. “மறு உத்தரவு வரும் வரையில் யாரும் சாலையில் நின்று வாகனப் பரிசோதனைகள் செய்வதையும், ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்” என்பதுதான் அந்த உத்தரவு.

ஆனால் இதன் பக்க விளைவாக இன்னொரு அதிர்ச்சித் தகவலும் காவல் துறையிலிருந்தே கிடைக்கிறது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் வாகனப் பரிசோதனைகளை நிறுத்தியதால் கடத்தல் சம்பவங்களும், குற்றங்களும், விபத்துகளும் செல்போன், செயின் பறிப்புகளும் 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.

முன்னே போனால் முட்டுகிறது பின்னே வந்தால் உதைக்கிறது என்பதுதான் தமிழக காவல் துறையினர் நிலைமை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...