இனி எந்த ரேஷன் கடைகளிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்கள் பொருட்களைப் பெறும் வசதியை ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுக் கமிசன் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், "பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை பொதுமக்கள் இதுவரையில் அந்தந்தப் பகுதியில் உள்ள கடைகளில்தான் பெற்று வருகின்றனர். இனி எந்தக் கடையிலும் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டத்தை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் எளிதாகப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் நடைமுறையில் இருந்துவருகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 80 கோடி குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2 முதல் 3 ரூபாய்க்கு அரிசி மற்றும் கோதுமை மாதம் ஒருமுறை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
பஸ்வான் மேலும் கூறுகையில், "இதுவரையில் 82 சதவிகித ரேசன் அட்டைகளை ஆதாருடன் இணைத்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இதுவரையில் 2.75 லட்சம் பி.ஒ.எஸ். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 2.75 கோடி போலி அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. உணவு மானியத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.17,500 கோடி செலவிடப்படுகிறது. தற்போது 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.