குறுஞ்செய்திகளை பகிரப்பயன்படும் செயலியான வாட்ஸ் அப் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், அதிக பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், பயனாளர்களின் பாதுகாப்புகளுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வசதிகளை கொண்டு வந்தது.
ஆனால், சமீபகாலமாக வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் வதந்திகளால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில், அண்மையில் வாட்ஸ் அப் வதந்திகளால், கும்பல் தாக்குதல் நடைபெற்று அப்பாவிகள் பலர் பலியாகினர். இதையடுத்து, வாட்ஸ் அப் மூலம், தவறான தகவல்கள், நாடு முழுவதும் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த வாட்ஸ் - ஆப் நிர்வாகத்துடன், மத்திய அரசு, பல கட்டமாக பேசியது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து, இந்தியா வந்துள்ள, வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவர், கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: தவறான தகவல்கள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகளை பற்றி, அந்நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் மற்றும் அவரது குழுவினருடன் விவாதித்தேன். இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு என, தனியாக குறைதீர் அதிகாரியை நியமிக்க இருப்பதாக தெரிவித்தனர். தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த தகவல்களை, அரசுக்கு தெரிவிக்கும்படியும் வலியுறுத்தினேன். இது குறித்து, தங்கள் தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின், பதில் அளிப்பதாக, அவர் தெரிவித்தார்" இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
