ரூ.31,870 கோடி நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு வரி வருவாயில் தொடர் சரிவு; சம்பள உயர்வாலும் சிக்கல்

'வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு, நிதி நெருக்கடிக்கான எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது' என, 'தினமலர்' நாளிதழ் எச்சரித்தது போல், 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் சிக்கி, தமிழக அரசு திணறுவதை, ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தி உள்ளது.

வரி வருவாய் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையால் அமலாகி சம்பளம் உயர்ந்தால், தமிழக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்படும்.

தமிழக அரசுக்கான வரி வருவாயில், 70 சதவீதம் வணிக வரி மூலமாக கிடைக்கிறது. 2015 - 16ம் நிதியாண்டில், 72 ஆயிரத்து, 68 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிப்., இறுதி வரை, 50 ஆயிரத்து, 100 கோடி ரூபாயே கிடைத்தது. ஒரு மாதத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் வணிகர்களிடம், 'முன்கூட்டியே வரி கட்டுங்கள்; அடுத்த மாதங்களில் சரி செய்து கொள்ளலாம்' என, கெஞ்சியும், வசூல் நடத்தியும், வரி வசூலாக, 61 ஆயிரத்து, 709 கோடி தான் கிடைத்தது. இது, இலக்கை விட, 10 ஆயிரத்து, 359 கோடி ரூபாய் குறைவு.
வரி வளர்ச்சி, 11.6 சதவீதம் வரை எதிர்பார்த்தாலும், 2.31 சதவீதமே உயர்ந்தது. '2011 - 12ல், 27 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, படிப்படியாக சரிந்து, 2.31 சதவீதமாக குறைந்து வருவது தமிழக அரசின் நிதி நெருக்கடிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது' என, நமது நாளிதழில், மே, 30ம் தேதி விரிவான செய்தி வெளியானது.
முந்தைய, நான்கு ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, வரி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை, சட்டசபையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே ஒப்புக் கொண்டார். இந்நிலையில், 2015 - 16ல் மட்டும், வணிக வரி மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய்; பத்திரப்பதிவு, வாகன வரி வசூல் வகையிலும், பிற வகையிலும், 1,900 கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்பட்டு, தற்போது, 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கி உள்ளது.
ரிசர்வ் வங்கி, மாநிலங்களின் நிதி பற்றாக்குறை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழக அரசிற்கு, 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய்க்கு நிதி நெருக்கடி உள்ளது; நிதி நெருக்கடிக்கு ஆளான மாநிலங்களில், தமிழகமே, முதல் இடத்தில் உள்ளது' என, கூறப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில், உத்தரபிரதேசம் - 31 ஆயிரத்து, 560 கோடி ரூபாய்; மஹாராஷ்டிரா - 30 ஆயிரத்து, 730 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி துவங்கும் போது, 2011 - 12ல், தமிழக அரசின் கடன் சுமை, 1.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து, 2015 - 16ல், 2.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் நிதி

.ஆண்டு இறுதியில், 2.47 லட்சம் கோடியாக கடன் சுமை கூடும் என, கணக்கிடப்பட்டுள்ளது
இந்த கடன் சுமை என்பது அனுமதிக்கப்பட்ட அளவே என்றாலும், மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் இன்னும் அதிகரிக்கும். இது, கடன் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்; இது, அனுமதி அளவையும்தாண்டலாம்.
வருவாய் வளர்ச்சியில் தொடர் சரிவு, சம்பள உயர்வால் பற்றாக்குறை என, அரசுக்கு நிதி நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதே, மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தமிழக அரசு வரி வருவாயை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தியில் முதலீடுகளை அதிரிக்கச் செய்வதிலும் சிறப்புக்கவனம் செலுத்தினால் மட்டுமே, தமிழகம் ஓரளவு தப்ப முடியும்.


நெருக்கடிக்கு என்ன காரணம்?

வரி வசூல் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து வணிக வரி ஆலோசகர் தியாகராஜன் கூறியதாவது:

* அரசுக்கு அதிக வருவாய் தரும் வணிக வரித்துறையில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நிலுவை வரி வசூலித்தல்; வரி ஏய்ப்பை தடுப்பதில் அரசு கவனம் செலுத்தவில்லை
* மாநிலத்தில், பெரிய அளவில் வர்த்தகம் மேம்படவில்லை; தொழில் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கம் அளிக்கவில்லை. வரி விதிப்பு நடைமுறைகளில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. தவறான வரி விதிப்பு முறையால், பல நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தன
* ஒற்றைச்சாளர முறையில் தொழில் அனுமதி என்பது, ஏட்டளவில் தான் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் சலுகைகள், தமிழகத்தில் தரப்படவில்லை
* வேளாண் உற்பத்தியிலும் பெரிய அளவில் சிறப்புக்கவனம் செலுத்தப்படவில்லை. மின் தட்டுப்பாடு தற்போது இல்லை என்றாலும், தேவைக்கேற்ப மின் உற்பத்தியில் கவனம் செலுத்தப்படாததும் சிக்கலுக்கு காரணம்
* பத்து ஆண்டுகளில், வரி விலக்கு அளிப்பதில் கவனம் செலுத்திய அரசு, இலவசங்களுக்கு செலவிடும் தொகையை எந்த வகையில் ஈடுகட்டுவது என்றோ, புதிதாக வரி விதிப்புக்களிலோ கவனம் செலுத்தவில்லை
* வரி ஆலோசகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளை, அரசு அழைத்து பேசி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவும் தவறி விட்டது. இதுவே, சிக்கலுக்கு முக்கிய காரணம்.

சரியும் வணிக வரி வளர்ச்சி

ஆண்டு / வருவாய் (ரூ.கோடியில்) / வளர்ச்சி (சதவீதத்தில்)
2010 - 11 / 31,117 / 25.37
2011 - 12 / 39,545 / 27.09
2012 - 13 / 47,885 / 21.09
2013 - 14 / 56,851 / 18.72
2014 - 15 / 60,314 / 6.26
2015 - 16 / 61,709 / 2.31
அரசுக்கு அதிகரிக்கும் கடன் சுமை
ஆண்டு / கடன் (ரூ.லட்சம் கோடி)
2011- 12 / 1.03
2012-13 / 1.20
2013-14 / 1.40
2014-15 / 1.78
2015 - 16 / 2.11

இது நடப்பு நிதியாண்டு முடிவில், 2.47 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்படுகிறது.
Advertisement
நமக்கு நாமேதேடிக்கொண்ட வினை

ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் முதலீட்டாளர்களை நேரில் சென்று அழைத்து, தங்கள் பக்கம் முதலீடுகளை இழுத்துக் கொள்கின்றன. அந்த வேகம் தமிழகத்தில் இல்லை. மாநில வளர்ச்சிக்கு துறைமுகங்கள் முக்கியம்.
மூடுவிழாவை நோக்கிச் செல்லும் சென்னை துறைமுகத்தை காப்பாற்றவோ, அதை மேம்படுத்தும் வகையிலான துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டப்பணிகளை தொடரவோ அரசு அக்கறை காட்டாததால், அண்டை மாநில துறைமுகங்கள் வளர்ச்சி பெறுகின்றன. நமக்கு நாமே தேடிக்கொண்ட வினை இது. அவசர கதியில் செயல்பட்டு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற, அரசு முயற்சிக்க வேண்டும்.
- ஜெ.கிருஷ்ணன்முன்னாள் தலைவர், அகில இந்திய விமான சரக்கு முகவர்கள் சங்கம்


'இலவசங்கள் தேவையில்லை'

கடந்த ஆட்சிகளில், தொடர்ந்து தரப்பட்ட இலவச திட்டங்களால், தமிழக அரசு நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை மறு பரிசீலனை செய்து, தேவையில்லாத இலவச திட்டங்களை கைவிட வேண்டும். தொழில் துறைக்கு சாதகமான சூழல் இல்லை; நிர்வாக ரீதியாக நெருக்கடிகள் அதிகம். இதற்கு தீர்வு காண வேண்டும். தொழில், வேளாண் துறை வளர்ச்சிக்கு சரியான திட்டமிடல், அதிக முதலீடுகளை செய்தால், ஓரளவு தப்ப முடியும்.
- ஜெ.ஜேம்ஸ்தலைவர், தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கம், கோவை


'மீள முடியாத சிக்கல் வரும்'

''தமிழகத்தின் நிதி பற்றாக்குறை, 2015 - 16ல், 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் கடன் அளவை குறைக்க வேண்டும் என்றால், நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும். இதில், மஹாராஷ்டிரா வெற்றி கண்டுள்ளது; நாம் தோல்வி அடைந்துள்ளோம். தமிழகத்தில் மொத்த கடன் சுமை கூட இது வழி செய்யும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையும் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால், கடன் மேலும் உயரும். நிதி நிர்வாகத்தை மேம்படுத்தாவிட்டால், சில ஆண்டுகளில், மீள முடியாத கடன் சுமையில் தமிழகம் சிக்குவது உறுதி.- அன்புமணிபா.ம.க., - எம்.பி.,முன்னாள் மத்திய அமைச்சர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...