ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,209 பேருக்கு பணி வழங்குவதில் புதிய சிக்கல்


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,209 பேருக்கும் ஆசிரியர் பணி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கமிட்டி கூடி அடுத்த வாரம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கூறினார். தமிழகம் முழுவதும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான
தகுதி தேர்வு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இதில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் தகுதி தேர்வு எழுதினர். 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தகுதி தேர்வு மதிப்பெண்களை வைத்து அரசு புதிதாக ஆசிரியர்களை நியமிப்பது தவறானது, புதியவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், “ஆசிரியர் தகுதி தேர்வில் புதியவர்களை சேர்த்துக் கொண்டு அக்டோபர் 14ம் தேதி தேர்வு நடத்த வேண்டும். மேலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் எந்த அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் தலைமையில் 4 பேர் கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும்“ என்றும் கூறப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று உடனடியாக வேலை கிடைக்கும் என்று காத்திருந்த 2,448 பேருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
அக்டோபர் 14ம் தேதி நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த ஜூலை மாதம் தேர்வு எழுதி, தோல்வி அடைந்தவர்கள்  புதிதாக விண்ணப்பிக்க தேவை இல்லை. புதிதாக பி.எட். மற்றும் ஆசிரியர் பயிற்சி படித்து முடித்தவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம். இவர்களுக்கான விண்ணப்பங்களை வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தியான விண்ணப்பத்தை 28ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பம் பெற்ற இடத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும். அனைவருக்கும் விண்ணப்பம் கிடைக்க வசதியாக தமிழகம் முழுவதும் 6 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படும். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேரின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. இதில், 37 பேர் வரவில்லை. இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். சான்றிதழ் சரி இல்லாத 202 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 2,209 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பணி வழங்க இருந்த நிலையில், உயர்நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். இந்த குழுவுக்கு பள்ளி கல்வி அமைச் சர் என்.ஆர்.சிவபதி தலைவராகவும், பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆசிரி யர் தேர்வு வாரிய தலைவர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் உறுப்பினர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு அடுத்த வாரம் கூடி புதிய விதிமுறைகளை வகுக்கும். அதன் படி தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கும், புதிதாக அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் எந்த அடிப்படையில் அரசு ஆசிரியர் பணி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யும். தமிழகத்தில் மொத்தம் 24,383 பணி இடங்களை வரும் நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...