நிறைவேற்றப்படுமா?

சொந்த பணத்தை செலவழித்து, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் இக்கட்டான நிலைக்கு, சத்துணவு அமைப்பாளர்களும், சமையலர்களும் தள்ளப்பட்டுள்ளனர். அரசின், 13 வகையான கலவை சாதம் திட்டம்,
முழுமையாக நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு மாணவரும், பள்ளிக்கு காய்கறிகள் கொண்டு வர வேண்டும் என்ற உத்தரவு, பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., ஏழை மாணவர்களின் நலனுக்காக, சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பின் வந்த முதல்வர்கள், இத்திட்டத்தை மேம்படுத்தினர்.தமிழகத்தில், 54 ஆயிரம் பள்ளிகளில், 1.23 லட்சம் அமைப்பாளர் மற்றும் சமையலர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒரு மாணவருக்கு, விறகு முதல் காய்கறி வரையிலான செலவுக்கு, 69 காசுகளும்; நகர்ப்புற பகுதிகளில், 79 காசுகளும் வழங்கப்படுகிறது. சிவில் வினியோகம் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை
வழங்கப்படுகின்றன. மாணவர்களின் நலனுக்காக, வாரம்தோறும், ஐந்து நாள் முட்டை, வாரத்தில் ஒரு நாள் கொண்டைக்கடலை, பாசிப்பயறு, உருளைக்கிழங்கு ஆகியவை கொடுக்கப்படுகின்றன. கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், "சத்துணவு, அங்கன்வாடி மாணவ மாணவியருக்கு, ஒவ்வொரு நாளும், ஒரு வகையான கலவை சாதம் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு, அமைப்பாளர், சமையலர்களுக்கு
பயிற்சி வழங்கப்பட்டது.

உரிய நிதி இல்லை:
ஆனால், கலவை சாதம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், அந்த திட்டம் தற்போதைக்கு கைவிடப்படலாம் என, கூறப்படுகிறது. அத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, மாணவர் ஒருவருக்கு உணவுக்காக, 1.50 ரூபாய் செலவினமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு கொடுத்தால் தான், கலவை சாதத்தை, மாணவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படும். இல்லையென்றால், திட்டம் வீணாவதுடன், மாணவர்களின் வயிறும் வீணாகிப் போகும்.சத்துணவு திட்டத்துக்காக, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மத்திய அரசு, 80 சதவீதம் மானியத்தை வழங்குகிறது. மீதமுள்ள, 20 சதவீதத்தை, மாநில அரசு வழங்கி வருகிறது. அவ்வாறு இருப்பினும், 10சதவீதம் செலவினத்தை, அந்தந்த சத்துணவு அமைப்பாளர்களே மேற்கொள்கின்றனர்.
குறைந்த சம்பளம்:
தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு, போதிய பணி பாதுகாப்பு இல்லை. குறைந்த அளவு சம்பளமே வழங்கப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பெரும்பாலும், ஏழ்மை நிலையில் உள்ள பெண்களே பணியாற்றி வருகின்றனர்.மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், சத்துணவுக்கான மானியத்தையும் நிறுத்தி விடுமோ, சத்துணவு திட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்படுமோ என்ற அச்சம் பணியாளர்களிடையேஉள்ளது.தமிழக முதல்வர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை மேம்படுத்தும் வகையில், சிறப்பு சலுகைகளை அளிக்க வேண்டும் என, பலமுறை போராடியும், அவர்களுக்கான பலன்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், சத்துணவு ஊழியர்களுக்கான சலுகைகளை முதல்வர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
மாணவர்களிடம் கேட்பதா?
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பழனிசாமி கூறியதாவது: சத்துணவு திட்டம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறையேசம்பளம் வழங்கப்படுகிறது. காய்கறி, மளிகை, விறகுக்கான பணத்தை, அதிகாரிகள் முறையாக கொடுப்பதில்லை. இந்த நிலையில், 13 வகை கலவை சாதம் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே திட்டம் நிறைவேறும்.தற்போதைய சூழலில், ஒவ்வொரு அமைப்பாளரும் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற அமைப்பாளருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கலவை சாதம் திட்டத்துக்காக, மாணவர்கள் வீட்டில் இருந்து காய்கறி கொண்டு வரவேண்டும் என, உத்தரவு போட்டுள்ளனர்.அவர்கள் காய்கறி கொண்டு வந்து சத்துணவு செய்வதென்பது சாத்தியமானது இல்லை. தமிழக முதல்வரிடம், சத்துணவு பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். அவற்றை நிறைவேற்றி, ஊழியர்களின் வாழ்க்கையில் முதல்வர் ஒளியேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...