பள்ளிகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வினாத்தாள் மையங்களில் வழங்கப்படும் என்பதால் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர தேவையில்லை என
பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. கடந்த ஆண்டு வரை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை பெற்றுச் சென்றனர். இந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.அதன்படி, மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுலர்களுக்கான கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளின் தலைமையாசியர்கள், முதல்வர்களிடம் இருந்து பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரித்து கணினியில் பதிவு செய்து அரசு தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டது.மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்திற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உரிய நேரம் வரை பட்டியலை பிரிக்க கூடாது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்ட மையங்களின் (குறிப்பிட்ட பள்ளிகள்) பொறுப்பாளர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பி வைக்கப்படும்.
அந்தந்த பள்ளிகளின் பெயரில் சீலிடப்பட்ட கவர்களில் மதிப்பெண்கள் பட்டியல் வைக்கப்பட்டி ருக்கும். வினாத்தாள் மையங்களில் இருந்து மதிப்பெண்கள் பட்டியலை தலைமையாசிரியர்கள் காலை 9 மணிக்கு முன்பாக வந்து பெற்றுச் செல்ல வேண்டும். இதனால் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் அனைவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிகளில் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு மதிப்பெண் பட்டியலை ஒட்ட வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை, இணையதளங்களில் வெளியாகும் மதிப்பெண் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்வதற்காக, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைப்பு வசதி ஏற்படுத்த முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் பிராட்பேண்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளுக்கான கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் இருந்தால், பள்ளி வசதி கட்டணத்தில் செலுத்தி பிராட்பேண்ட் இணைப்பை உபயோகத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.