உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, நான்கு நாட்கள் மட்டுமே உள்ள
நிலையில், பணி அனுபவ சான்று வழங்காமல், மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களில்
அலைக்கழிப்பு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
பணி அனுபவம் குறித்த அரசின் நிலை, சென்னை ஐகோர்ட் உத்தரவு ஆகியவற்றால் ஏற்பட்ட குழப்பம், இந்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறுகின்றனர். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடம், டி.ஆர்.பி., மூலம், நிரப்பப்படுகிறது. இதற்காக, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ள தகுதிகளில், முதுகலை பட்டத்தில், 55 சதவீதம் மதிப்பெண்ணுடன், மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) வெற்றி பெற்று இருக்க வேண்டும். அல்லது எம்.பில்., - பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் தகுதி உடையவர்கள் என, கூறப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் நடக்கும் இத்தேர்வுக்கு, அரசு நிர்ணயித்துள்ள மதிப்பெண், 34. இதில், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆசிரியரின் பணி அனுபவம் என்பது, "நெட், ஸ்லெட்' அல்லது பிஎச்.டி., தகுதி பெற்ற நாளிலிருந்து, ஆசிரியராகப் பணியாற்றுவதே, கணக்கில் எடுத்து கொள்ளப்படும்' என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.ஆர்.பி.,யின் இந்த அறிவிப்புக்கு, பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர் பணி அனுபவத்துக்கு, ஸ்லெட், நெட் போன்ற தகுதித் தேர்வை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கடந்த காலங்களில், இந்த நடைமுறையில் தான், கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. பணி அனுபவம் குறித்து தெளிவாக முடிவை வெளியிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை, விசாரித்த ஐகோர்ட், "பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைப்படி, பணி நியமனத்துக்கு, கடைப்பிடிக்கப்பட்ட கல்வி தகுதியைக் கொண்டே, பணி அனுபவத்தை கணக்கிட வேண்டும்' என, தீர்ப்பளித்தது. சென்னை ஐகோர்ட் தீர்ப்பு பின்பும், பணி அனுபவத்தைக் கணக்கிடுவது குறித்து, டி.ஆர்.பி., தெளிவுபடுத்தவில்லை. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில், கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றுவோருக்கு, பணி அனுபவ சான்று வழங்க, கல்லூரி கல்வி இயக்குனரகம் முன்வராமல் உள்ளது. உதவி பேராசிரியர் தேர்வுக்கு, விண்ணப்பங்களை அளிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கவுரவ விரிவுரையாளர்கள், விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறியதாவது: உதவி பேராசிரியர் பணிக்கு, ஜூலை 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. பணி அனுபவம் குறித்து ஐகோர்ட் தீர்ப்பளித்தும், டி.ஆர்.பி., தன் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இதனால், மண்டல இணை இயக்குனரக அலுவலகங்களில், ஆசிரியர்களுக்கான பணி அனுபவ சான்று வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். இதனால், விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க செயலர் பிரதாபன் கூறியதாவது: ஐகோர்ட் உத்தரவுப்படி, கல்லூரி கல்வி இயக்குனரகம், உடனே பணி அனுபவ சான்றிதழை வழங்க, மண்டல இணை இயக்குனரகத்திற்கு உத்தரவிட வேண்டும். உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, நான்கு நாட்களே உள்ளதால், உடனே பணி அனுபவ சான்றை வழங்க வேண்டும். இவ்வாறு பிரதாபன் கூறினார்.