முதுகலை ஆசிரியர் பணி இடங்களுக்கான, போட்டித் தேர்வு, தமிழ்
வினாத்தாளில், 44 கேள்விகளில் எழுத்துப் பிழைகள் இருந்ததால்,
தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை
நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டது. இத்தேர்வுக்கான அறிவிப்பை, டி.ஆர்.பி.,
கடந்த மே, 9ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு, 1.67 லட்சத்திற்கும்
மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
8,000 பேர் "ஆப்சென்ட்':மாநிலம்
முழுவதும், 421 மையங்களில், முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு,
நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. காலை, 8:00 மணி முதலே, தேர்வு
மையங்களில் தேர்வு எழுதுவோர் குவிந்தனர்.தமிழ், ஆங்கிலம், கணிதம்,
இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட, 17 பாடங்களுக்கு
தேர்வு நடந்தது. 150 மதிப்பெண்களுக்கு, "அப்ஜெக்டிவ்' முறையில் கேள்விகள்
கேட்கப்பட்டிருந்தன. 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதினர்; 8,000 பேர்
வரவில்லை.
சென்னை மாவட்டத்தில், 55 மையங்களில்
தேர்வு நடந்தது. மொத்தம் 13,927 பேர் போட்டித் தேர்வு எழுத
விண்ணப்பித்தனர். இதில், 12,908 பேர் தேர்வு எழுதினர்; 1,019 பேர்
"ஆப்சென்ட்' ஆயினர். திருச்சியில் உள்ள புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்
பள்ளி மற்றும் தெப்பக்குளம், பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி தேர்வு
மையங்களை, பள்ளி கல்வித் துறை அமைச்சர், வைகை செல்வன் பார்வையிட்டு, ஆய்வு
செய்தார்.சென்னை அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம்,
சி.எஸ்.இ.பெய்ன் மேல்நிலைப் பள்ளி, ஈவாட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங்களை, பள்ளி கல்வித்
துறை முதன்மை செயலர், சபீதா பார்வையிட்டார்.
குளறுபடி:தமிழ்ப்
பாடத்தில், மொத்தம்உள்ள, 150 கேள்விகளில், 44 கேள்விகள் எழுத்துப்
பிழைகளுடன் அச்சடிக்கப்பட்டு இருந்தன. அதில், ஆங்கிலத்துக்கு என்பது
"ஆதுகிலத்துக்கு' என்றும், வங்காள என்பது "வதுகாள' என்றும், ஆழ்வார் என்பது
"ஆழ்வார்' என்றும், தமிழ் என்பது "தமிழ் என்றும், வழங்கியவர் என்பது
"வழதுகியவர்' என்றும் இருந்தது.
மேலும்,
பெருங்கடுங்கோ என்பது "பெருதுகடுதுகோ' என்றும், புகழ்தல் என்பது "புகாதல்'
என்றும், காங்கிரஸ் என்பது "காதுகிரஸ்' என்றும், ஐங்குறுநூற்றின் என்பது
"ஐதுகுறுநூற்றின்' என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
அச்சுப்
பிழையுடன் கூடிய வினாக்களை, புரிந்து கொள்ள முடியாததால், தேர்வு எழுத
முடியாமல் தேர்வர்கள் திணறினர். இதுகுறித்து, மைய பொறுப்பாளரிடமும் புகார்
தெரிவித்தனர். "வினாத்தாள் குளறுபடிக்கு தங்களால் ஒன்றும் செய்ய முடியாது'
என்று அவர்கள் பதிலளித்தனர்.இதுபோல, வணிகவியல் பாட வினாத்தாளிலும், 47
கேள்விகள் தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளதாக, தேர்வு எழுதியோர் தெரிவித்தனர்.
மனதளவில் பாதிப்பு:இதுகுறித்து,
சி.ஐ.டி., நகர் மையத்தில் தேர்வெழுதிய, செந்தில் ராஜா கூறியதாவது:தமிழ்ப்
பாட வினாத்தாளை பார்த்தவுடன், எனக்கு பயம் வந்து விட்டது. ஒரு மணி நேரம்
கழித்தே, தேர்வு எழுதத் துவங்கினேன்.வினாத்தாள் தயாரிப்போரின், கவனக் குறை
வாலேயே எழுத்துப் பிழையுடன் அச்சாகி உள்ளது. ஆசிரியர் தேர்வாணையத்தின்
அலட்சியப் போக்கு அதிர்ச்சிஅளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.முதுகலை
ஆசிரியர் :தேர்வுக்கான தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில்
வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் இல்லாததால் குழப்பம்!:சென்னையில்,
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, 55 மையங்களில், முதுகலை ஆசிரியர்
தேர்வு நடந்தது. டி.ஆர்.பி., நடத்தும் தேர்வில், தேர்வு மையத்தின், முழு
தகவலும் தேர்வர்களுக்கு அனுப்புவதில்லை. இதனால், பலர் தேர்வு மைய விவரங்களை
கண்டறிய முடியாமல் பரிதவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி.,
நடத்தும் தேர்வுகளில், தேர்வர்களுக்கு அனுப்பும் மைய முகவரியில், தெரு
பெயருடன் தெளிவான முகவரி அனுப்பப்படும். ஆனால், டி.ஆர்.பி., எந்த ஒரு
தேர்விலும், இம்முறையை பின்பற்றுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.