அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தது 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை
வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, மாற்றுத் திறனாளிகளான, கண் பார்வையற்றோர், பார்வை குறைபாடு உள்ளவர்கள், குணமடைந்த தொழு நோயாளிகள், செவித் திறன் குன்றியவர்கள், நடமாடுவதில் குறைபாடு உடையவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரில் 40 சதவீதம் குறைபாடு உள்ளவர்கள் அரசு வேலை வாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீட்டில் பயனடைவார்கள்.