அரசு ஊழியர்கள் வேறு துறையில் பணியாற்றிய காலத்தையும் பென்ஷன் வழங்கும்போது கணக்கிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுக்காவை சேர்ந்த குஞ்சுத
பாதம் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த 1983ம் ஆண்டு திருத்துறைபூண்டி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்ந்தேன். 3 ஆண்டுக்கு பிறகு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2011ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். அதன்படி 28 ஆண்டு அரசு பணியாற்றினேன். ஆனால் அரசு 28 ஆண்டுகளை கணக்கில் எடுத்து கொள்ளாமல், சத்துணவு அமைப்பாளராக வேறுதுறையில் பணியாற்றியதாக கணக்கில் எடுத்து பென்சன் வழங்கியுள்ளது.
இது தவறானது. கடந்த 2010ம் ஆண்டு அரசாணையில் வேறு துறையில் பணியாற்றிய அரசு ஊழியர்களின் பணியையும் கருத்தில் கொண்டு கணக்கிட்டு பென்சன் வழங்க வேண்டும என்று தெளிவாக கூறியுள்ளது. இதுபற்றி அரசுக்கு மனு கொடுத்தேன். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, அரசாணையின்படி மனுதாரர் வேறு துறையில் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு பென்சன் வழங்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை 3 வாரத்திற்குள் பரிசீலனை செய்து அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.