இப்படியும் ஒரு பள்ளிக்கூடம்!

”நான் ஸ்கூலுக்குப் போகணும்!”
 “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு!”
 “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க கொண்டுபோய் விடுங்க!”
இப்படி ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்குமான உரையாடலை எங்கேனும் கண்டிருக்கிறீர்களா? பள்ளிக்கூடம் என்றாலே வேப்பங்காயாக்க் கசக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமைகூட வரவேண்டும் என்று அடம்பிடிக்கும் அளவிற்கு இந்தப் பிள்ளைகளுக்கும் பள்ளிக்குமான உறவு மட்டும் இத்தனை வலுவாக இருக்கும் காரணம் என்ன?
இந்தக்குழந்தை படிக்கும் பள்ளிக்குள் நுழைந்தால் தென்படும் காட்சிகள் அசர வைக்கின்றன. மைதானத்தில் குழந்தைகள் துள்ளி குதித்து விளையாடுகிறார்கள். ஒரு பக்கம் களிமண் கொண்டு பொம்மைகள் செய்யும் குழந்தைகள். இன்னொரு பக்கம் அட்டைகளை கையில் வைத்துக்கொண்டு பாடம் கற்கும் குழந்தைகள். கடலை சாப்பிட்டபின் குப்பைக்கூடைக்குப் போகும் கடலைமூடிகளைக் கொண்டு உருவங்களை உருவாக்கும் குழந்தைகள். வாலிபால் விளையாடும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்.  மைதானத்தைக் கடந்து உயர்நிலைப்பள்ளிக்குள் நுழைந்தால் ஒரு பக்கம் நாடக ஒத்திகை நடக்கிறது. வகுப்பறைக்குள் எட்டிப்பார்த்தால் ஒரு குழந்தை ஆசிரியையின் மடியில் அமர்ந்திருக்கிறது. மற்ற குழந்தைகள் நின்று கொண்டும், அமர்ந்துகொண்டும், கால்களை நீட்டி உட்கார்ந்துகொண்டும் பாடம் படிக்கின்றன. கைகட்டி வாய்பொத்தி பலகைகளில் அமர்ந்திருக்கும் குழந்தைகளை மட்டுமே வகுப்பறைகளில் பார்த்திருக்கும் நம் கண்களுக்கு இந்தக் காட்சிகள் வித்தியாசமாய் தெரிகின்றன.
 மாணவர்கள் ஆசிரியர்களிடம் நண்பர்கள் போல உரையாடுகிறார்கள். சந்தேகங்களை கேட்கிறார்கள். நூலகத்தில் அமைதியாய் அமர்ந்து வெவ்வேறு தலைப்புகளில் நூல்களை வாசிக்கிறார்கள் மாணவர்கள்.
இவையெல்லாம் எங்கே என்கிறீர்களா? இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் நடத்தும் பள்ளியில்தான்! பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 16வது கிலோமீட்டரில் உள்ள குறிச்சியில் இருக்கிறது இந்தப் பள்ளி. சில்லென்ற காற்று வருடிவிட, 6 ஏக்கர் பரப்பளவில் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியும் உயர்நிலைப்பள்ளியும் ஒருங்கே அமைந்துள்ளன
 ஊழியர் சங்கங்கள் என்றால் வேலைநிறுத்தம், சம்பள உயர்வு போன்றவற்றிற்கு மட்டும்தான் என்றில்லாமல் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தேவையை உணர்ந்து ஆரம்பிக்கப்பட்ட்தே ஐ.பி.இ.ஏ. பள்ளி. பெரும்பாலும் கிராமங்களில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிடும் மாணவர்கள் அதிகம் உண்டு. இதற்குக் அவர்களது பொருளாதார நிலையும் ஒரு காரணம். ஆகவே இது போன்ற மாணவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி. பெரும்பாலும் நிலமற்ற கூலி விவசாயிகளின் பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள்.. வழக்கமான கல்வி முறை கிடையாது. தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தி இருக்கும் செயல்வழிகற்றல் முறையை கடந்த 8 ஆண்டுகளாகவே பின்பற்றி வரும் பள்ளி இது. இந்தியன் வங்கி ஊழியர்கள் அளிக்கும் நன்கொடை, கடன், வங்கி சாராத மற்ற உள்ளங்கள் அளிக்கும் நன்கொடைகள் இவற்றைக் கொண்டுதான் இந்தப் பள்ளி நட்த்தப்படுகிறது.
 
 “2002ம் ஆண்டில் பள்ளி செயல்பட ஆரம்பித்த்து. தமிழக அரசின் கல்வித்திட்டத்தைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். பிள்ளைகளை அடிக்க மாட்டோம். பிள்ளைகளுக்கு சுமையான வீட்டுப்பாடம் இருக்காது. வீட்டுப்பாடம் அதிகமாக அளிக்கும் பள்ளியே சிறந்த பள்ளி என்று மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கை களைந்தெறியப்படவேண்டும் இங்கே ரேங்க் கார்டு கிடையாது. ஆகவே பொறாமை, காழ்ப்புணர்ச்சிக்கு இடம் கிடையாது தாழ்வு மனப்பான்மைக்கும் இடமில்லை. நாங்கள் தமிழ்வழியில்தான் மாணவர்களை பயிற்றுவிக்கிறோம். சில பெற்றோர்களுக்கு இருக்கும் ஆங்கிலத் தாக்கத்தால் பிள்ளைகளை தமிழ்வழிக்கல்வியில் சேர்க்க தயங்குகின்றனர். தமிழ்வழி கல்வி தரும் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவது காலத்தின் தேவையாக மாறும் என்று நம்புகிறோம்..” என்கிறார் பள்ளியின் அறங்காவலர் கிருஷ்ணன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIBoZPNXy7wupq4q57Initc9fwLYlHUVCOzvZLOnylJHmrJ3XCDTPB9JJvdZQBO_FDyxDiMUx32no2QoY2unF1g6X7J3JRqh5tw9PzmKfsO0zIH-JGmi226uvrc28OXN4iFbskK_9U4g/s1600/3+P1030447.JPG
 
கல்விக்கட்டணம் குறைவுதான். ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. பிள்ளைகளுக்கு கல்வியோடு சேர்த்து நாடகம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளையும் பயிற்றுவிக்கின்றனர். “தி ஹிந்து” நாளிதழில் ‘யங்வோர்ல்டு’ பகுதியில் அடிக்கடி இப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் இடம்பெறுவதைக் காணலாம். இதற்கு உயர்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் சரவணன் ஒரு முக்கிய காரணம். பள்ளி விழாக்களில் திரைப்பட பாடல்கள் கிடையாது. அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகளான கரகம், மான்கொம்பு, தேவராட்டம், ஆதிவாசிகள் நடனம் போன்றவற்றையும் தொழிற்முறை கலைஞர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள்.தென்னிந்திய அளவில் நடந்த நாடகப்போட்டியில் பங்கு கொண்ட இப்பள்ளி மாணவர்கள் நடித்த ‘வானிலை மாற்றம்’ என்ற நாடகம் சிறந்த இயக்கத்திற்கான பரிசு பெற்றது.
 
”பேராசிரியர் ராமானுஜம், அலெக்ஸ், மாதையன் பிரகதீஸ்வரன் போன்ற கலைஞர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு நாடகப் பயிற்சி அளித்திருக்கின்றனர். நாடகப் பயிற்சி பட்டறைகளில் மாணவர்களின் தன்னம்பிக்கையும் படைப்பாற்றலும் நினைவாற்றலும் மிளிரும் வண்ணம் பயிற்சி இருக்கும். பழங்குடி நடன்ங்களை முரசு கலைக்குழுவினர் பயிற்சி அளிக்கிறார்கள். திண்டுக்கல் சக்தி க்லைக்குழுவினரும் எங்கள் மாணவர்களை பயிற்றுவித்திருக்கிறார்கள். தினமும் அசெம்பிளியில் மதம் சார்ந்த பாடல்களையும் வழிபாட்டு முறைகளையும் நாங்கள் பின்பற்றுவதில்லை. முகில், கோவிந்தன் போன்ற கலைஞர்கள் எங்கள் மாணவர்களுக்கு அளித்த பாடல் பயிற்சியில் கற்றுக் கொண்ட மதச்சார்பற்ற சமூக மேம்பாட்டுப் பாடலகளைத்தான் அசெம்பிளியில் பாடுகிறார்கள் மாணவர்கள்” என்கிறார் பள்ளியின் தாளாளர் தனபால்.
 
மாணவர்களை குழுவாரியாக பிரித்து கதை சொல்ல வைப்பது இங்கே பின்பற்றப்ப்டும் இன்னொரு முறை. கதை சொல்லும் ஆற்றல் மாணவர்களுக்கு இதன் மூலம் வளர்கிறது. இப்பள்ளி மாணவர்கள் ப்ரிதிவி, பிரியதர்ஷினி, பிச்சைமுருகன் ஆகியோர் கூறிய வாய்மொழிகதைகள் பாரதி புத்தகாலயத்தால் நூல்களாக பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் வினாடி-வினா போட்டிகளில் முதலிடம் பெற்றிருக்கிறார்கள்.
 
“ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ரெக்கார்டு வைத்திருக்கிறோம். அதில் அவர்கள் கதை, கவிதை இப்படி என்ன நினைக்கிறார்களோ அதை எழுதுவார்கள். சிறுவயதிலேயே மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையைத் தூண்டும் வித்த்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களை களப்பணிக்கி அனுப்புகிறோம்.” என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபின்சன்.
2006ம் குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாட்டில் அப்துல் கலாம் கையால் ஐ.பி.இ.ஏ. பள்ளி மாணவர் ரங்கராஜன் ‘இளம் விஞ்ஞானி’ விருது பெற்று வந்தபின் அடுத்த வந்த ஆண்டுகளிலும் ரகுவரன், இனியவன் என இப்பள்ளி மாணவர்களே ‘இளம் விஞ்ஞானி’  விருது பெற்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார்கள். மாணவர்கள் ஆண்டுதோறும் ஒரு புராஜக்ட் செய்கிறார்கள். அதற்காக ஒரு குழுவாக மாணவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து கட்டுரைகளை சமர்ப்பிக்கிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்காக இவர்கள் விருது பெற்றனர்..
 
2006
தலைப்பு : குறிச்சியில் நீராதாரங்கள்  - ஓர் ஆய்வு.
                                      https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKdqknU1q7AHkQjyhR3cz7bBT9XCmQ_yuchoutis-s_QvitXkh02h62ohm7S9liSDbZ_1lc75GXF6mPabd4Boh8PA824ARqm9SjZLecjo0yFZGftbfSOH3tNGPc6UGklIffyP-CUWIuQ/s1600/03+Rangarajan.jpg
                  
                                                                 விருது பெற்ற மாணவன்: ரங்கராஜன் 
 
2007
தலைப்பு: பண்ணவயல் ஏரி – ஓர் ஆய்வு
 
                                              https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-KOInLNGKZDNNzi7AfV6zAanGbYY-jU-nM2jI1sVk76JKZBW8nM54VHIHqaNoW9FAjoSsaJVMkw_5z2kpkjFqq1Vd0lHLm3ayJgZAj9gGZZ55ry5IkhzqmlcNNnKO6Hd19-Zx0VDsvw/s1600/02+Raguvaran.jpg
                                                               
                                                                 விருது பெற்ற மாணவன்: ரகுவரன்
 
 
2008
தலைப்பு: இயற்கைவழி விவசாயமும் மண்வளப்பாதுகாப்பும்
 
                                          https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv8txBvGIXe36sU-rze7ioduZYA4ZwaI_nwCMdo5AkJkxnJdjDLnrjNF91ZZYlcJn6Nzve1XeBvCM565ont0fbiAPcz6iJD6RzE2Pg2aDhBemaVjm4_R_cwYZGF6yqIgipjd0XthYDag/s1600/01+P.Iniyavan.jpg
                                           
                                                  விருது பெற்ற மாணவன் : இனியவன்
எல்லாம் சரி! எப்படி படிக்கிறார்கள் இவர்கள்? இதுவரை மூன்று செட் மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார்கள். முதல் ஆண்டு 97% தேர்ச்சி. அதன்பின் கடந்த இரண்டு வருடங்களாக 100% தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் மாணவர்கள்.
 “எந்த மெட்ரிகுலேசன் பள்ளி மாணவனுக்கு சமமாகவும் எங்கள் மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்கிறார்கள். பொனிக்ஸ் எனப்படும் ஒலிக்குறியீடுகளைக் கொண்டு வார்த்தைகளை வாசிக்கும் முறையையும் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். ஆசிரியரை எதிர்பார்க்காமல் எங்கள் பிள்ளைகள் பாடங்களை படித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு நுட்பமானவர்களாக இருக்கிறார்கள்.  செல்ப் லெர்னிங் எனப்படும் சுயகற்றல் முறையை நாங்கள் அவர்களிடத்தில் வளர்க்கிறோம். அவர்களை இவ்வாறு வளர்த்தெடுப்பதில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஊதியத்திற்காக உழைக்காமல் உண்மையான ஈடுபாட்டுடன் ஆசிரியர்கள் பணியாற்றுவதனாலேயே எங்கள் மாணவர்கள் சாதிக்க முடிந்திருக்கிறது. சனிக்கிழமை அன்று ஃப்ரீரைட்டிங் என்றொரு வகுப்பு இருக்கும். இந்த வகுப்பில் மாணவர்கள் எதுபற்றி வேண்டுமானாலும் கட்டுரை எழுதலாம். இந்தப் பயிற்சி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.” என்கிறார் தனபால்.
முரட்டுத்தனமான மாணவர்களை ஆசிரியர்கள் கையாளும் முறையே வித்தியாசமானது. அப்படிப்பட்ட மாணவர்கள் பிறரை கிள்ளுவது அடிப்பது என்றிருப்பார்கள். அவர்களிடம் ஒரு சோடா மூடியையும் ஒரு ஆணியையும் கொடுத்து அதில் ஓட்டை போடச் சொல்வது போன்ற பல பயிற்சிகள் இங்கே உண்டு. நாளடைவில் அவர்களது முரட்டுத்தனம் விலகி விடும்
 பரிசோதனை முயற்சிகள் பலவற்றை செய்துகொண்டு பொது பாடத்திட்டத்தையும் கற்பித்து மாணவர்களை வெற்றிபெறச் செய்வதில் இப்பள்ளி மற்ற பள்ளிகளுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது. ”நாங்கள் நினைப்பவற்றை சுதந்திரமாக பரிசோதனை செய்து பார்க்க முடிகிறது. படைப்பாற்றல் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே இங்கே வேலை. எந்திரத்தனமாக பாடம் நடத்திக்கொண்டு சிலபஸ் முடிக்கவேண்டும் என்று மட்டும் நினைக்கும் ஆசிரியர்களுக்கு இங்கே வேலை இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும் புரியும் வரை நாங்கள் விடுவதில்லை.”என்கிறார்கள் இங்கே பணியாற்றும் ஆசிரியர்கள்.
 ”வரும் ஜனவரி மாதத்திலிருந்து வாரம் ஒரு குறும்படம் திரையிட்டு மாற்றுசினிமாவை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தி, அவர்களை விமர்சனம் செய்ய வைக்க இருக்கிறோம்” என்கிறார் தனபால்.
 மாற்றம் விரும்புபவர்களுக்கான பள்ளி இதுதான்!
நன்றி : புதிய தலைமுறை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...