முன்னாள் ஜனாதிபதி, பேராசிரியர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின்,
பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அவர், ஆசிரியர் பணிக்கே, இலக்கணம் வகுத்தவர்.
தன் ஆழ்ந்த அறிவால், ஆற்றல் மிக்க அயராத உழைப்பால், மாணவர்கள் மனதில், இடம்
பிடித்தவர். "ஆசிரியர் பணியை, நேசிக்கும் ஆசிரியரே, நல்லாசிரியராகத் திகழ
முடியும்; அத்தகைய ஆசிரியரே, மாணவர்கள் மனதில் இடம் பெற முடியும்' என்பது,
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல்கலாமின் கருத்து. அவரும் ஒரு
நல்லாசிரியர். ஆசிரியர் பணி என்பது, அறப்பணி. இப்பணியை, ஒரு தொழில் என்று
குறிப்பிடுவதை விட, சேவை என்று குறிப்பிடலாம். இந்த சேவை, ஒரு சிறந்த
நாட்டை உருவாக்க, மிகவும் தேவை. நம் அகவிருள் அகற்றி, அறிவொளி பரவச்
செய்பவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான், அவர்கள், தாய்க்கும், தந்தைக்கும்
அடுத்தபடியாக மதிக்கப்படுகின்றனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று,
போற்றுதலுக்கு உரியவர்கள் ஆசிரியர்கள். எதிர்காலத்தில், நாட்டை
நிர்வகிக்கிற தலைவர்களை, ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். அதனால் தான்,
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், "இந்நாட்டை யாம் ஆள எம்மைப்பயிற்றுவிக்கும்
தென்னாட்டுத் தீரர் செழுந்தமிழர் ஆசிரியர்' என்று குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள்,
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கின்றனர். ஆசிரியர்களோ, அடுத்த
தலைமுறையைப் பற்றி சிந்திக்கின்றனர். நாட்டின் எதிர்கால சிற்பிகளை
உருவாக்குகின்றனர். அதனால் தான், ஒரு நாட்டின் தலைவிதி, வகுப்பறைகளில் தான்
நிர்ணயிக்கப்படுகிறது என்ற கூற்று உருவானது. ஆசிரியர்கள், ஆயுட்கால
மாணவர்கள். அவர்கள், நிரம்ப படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு,
படித்து, ஆற்றலை வளர்த்துக் கொண்டால் தான், மாணவர்கள் எதிர்பார்ப்பை,
நிறைவு செய்ய முடியும். அவர்கள் ஐயங்களை நீக்க முடியும். ஒவ்வொரு
துறையிலும், நடைபெற்று வரும் ஆய்வுகள் வாயிலாக, வெளிவரும் உண்மைகளை,
அந்தந்தத் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தற்போதைய
மாணவர்கள், பத்திரிகைகள், "டிவி' மற்றும் இணையதளம் வழியாக, பல செய்திகளை
அறிந்து, விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். எனவே, அவர்கள், அவற்றை விடத்
தெளிவான விளக்கங்களை, வகுப்பறைகளில் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு சராசரி ஆசிரியர், புத்தகங்களில் தான் படித்தவற்றை, வகுப்பறையில்
தெரிவிக்கிறார். சில ஆசிரியர்கள், விளக்கமும் அளிக்கின்றனர். ஆனால்,
உயர்ந்த ஆசிரியர், தான் அளிக்கும் விளக்க உரைகள் மூலம், மாணவர்களின்
சிந்தனையைத் தூண்டுகிறார். அவர்களின் ஆற்றல் வளர வழி செய்கிறார். ஆற்றல்
மிக்க ஆசிரியர்கள், மாணவர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்;
போற்றப்படுகின்றனர். ஆசிரியர்கள் ஒழுக்க சீலர்களாகவும், உயர்ந்த
பண்பாடுடையவர்களாகவும் திகழ வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியர்களைத் தான்,
மாணவர்கள் தங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றனர்.
நல்ல
ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக, அரசு, ஆண்டுதோறும், நல்லாசிரியர்
விருதுகளை, சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. மாணவர்களுடைய
வெற்றியைக் கண்டு, பெற்றோருக்கு நிகராக மகிழ்ச்சியடைபவர்கள் தான்
ஆசிரியர்கள். அவர்களுக்கு, மாணவர் சமுதாயம், நல்ல மரியாதை அளிக்க வேண்டும்.
"உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது கற்றல்
நன்றே' என்பது, இலக்கியம் வலியுறுத்தும் உண்மை. உறுபொருள் அல்ல, ஒரு
பொருளும் கொடுக்கா விட்டாலும், உரிய மரியாதை கொடுத்து, ஆசிரியர்களின், நல்
ஆசியை, மாணவர்கள் பெற வேண்டும். அவர்களின் எதிர்காலம், ஆசிரியர்களின்
வழிகாட்டுதலுடன், சிறப்புற அமையவேண்டும். எவ்வித எதிர்பார்ப்புமின்றி,
அனைத்து மாணவர்களுக்காகவும் உழைக்கிற ஆசிரியர்களின் நல்வாழ்விற்காக, நாம்,
ஆசிரியர் தினத்தில், இறைவனை வேண்டுவோம். உயரட்டும் ஆசிரியர்களின் வாழ்வு!
தொடரட்டும் அவர்களின் நற்பணி!
சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.
டாக்டர் மேஜர் மு.ஜெய்லானி டீன், முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி, சென்னை.