தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது

தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய 12 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை பார்வையற்றோருக்கு 40 சதவீதமாக குறைக்க வேண்டும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னை கே.கே.நகரில் உள்ள மாற்றுத் திறனாளிக்கான அலுவலகம் முன்பு அந்த சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு மற்ற மாணவர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

தோல்வியில் முடிந்தது

அந்த சங்கங்களின் சார்பில் சென்னையில் எங்காவது ஒரு சாலையில் திடீர் திடீரென்று மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் நடத்தும் பார்வையற்ற மாணவர்களை போலீசார் கைது செய்வதும், எங்காவது அழைத்துச் சென்று விட்டுவிடுவதுமாக இருந்து வந்தது.

போராட்டம் விரிவடைந்த நிலையில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர், சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து சமீபத்தில் பேசினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, போராட்டம் தொடர்ந்தது.

ஐகோர்ட்டு தலையீடு

இந்த நிலையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த 9 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். அவர்களுக்கு ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களை அரசியல் கட்சித் தலைவர்களும் சந்தித்து ஆதரவுக்கரம் நீட்டினர்.

பின்னர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விவகாரத்தில் ஐகோர்ட்டும் தலையிட்டது. புகார்க் கடிதம் ஒன்றின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

உடன்பாடு

அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. எனவே அந்த சங்கத்தின் தலைவர் நாகராஜன், செயலாளர் வேல்முருகன் உட்பட சிலர் அமைச்சர் வளர்மதி மற்றும் அதிகாரிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அரசுக்கும் போராட்டதாரர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதுகுறித்து பேட்டி அளித்த நாகராஜன், ‘‘அரசு எங்களை அழைத்து பேசியது எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை முதல்–அமைச்சர் பரிசீலிப்பார் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிடுகிறோம். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் மீண்டும் போராடுவோம்’’ என்று கூறினார்.

உண்ணாவிரதம் முடிந்தது

அதைத் தொடர்ந்து அமைச்சர் வளர்மதி, ராயப்பேட்டையில் அனுமதிக்கப்பட்டிருந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரவிந்த், பானுகோபால், சக்திவேல், சுரேஷ், ரவிச்சந்திரன், வீரப்பன், பெரியான், விஸ்வநாதன், தங்கராஜ் ஆகிய 9 பேரையும் சந்தித்து அவர்களுக்கு பழரசம் வழங்கினார். அதைப் பருகியதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...