பிஇ கவுன்சலிங்: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தகவல்கள் இதோ...

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள இடங்கள், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் (தமிழ் மீடியம்) பட்டப் படிப்புகளில் உள்ள இடங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்தக் கவுன்சலிங்கை நடத்துகிறது. இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த மாதம் 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?


கோடிங் ஷீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை விண்ணப்பப் படிவத்தில் உள்ள பதிவு எண் இடத்தில் தெளிவாக எழுதவும். பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை கவனத்துடன் எழுதவும். மாணவர்கள் தங்களது புகைப்படத்தை ஒட்டி, அதில் உரிய அதிகாரியிடமிருந்து சான்றொப்பம் பெற வேண்டும். தங்களுடைய பத்தாம் வகுப்பு டிரான்ஸ்பர் சர்டிபிகேட்டில் (டி.சி.) கொடுக்கப்பட்டுள்ளபடி, பிறந்த தேதியை எழுதவும். விண்ணப்பத்துடன் பூர்த்தி செய்த கோடிங் ஷீட்டையும் மறக்காமல் அனுப்ப வேண்டும்.

10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டிரான்ஸ்பர் சர்ட்டிபிகேட், பிளஸ் டூ ஹால் டிக்கெட் ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்குரிய சான்றிதழ்களின் நகல்கள், டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். நேட்டிவிட்டி சான்றிதழ் நகல், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான நகல், அதற்கான உறுதி மொழிச் சான்றிதழ், இலங்கைத் தமிழ் அகதிகள் என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றையும் அதற்குரிய விண்ணப்பதாரர்கள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த விரிவான தகவல்கள் இணையதளத்திலும் தகவல்கள் மற்றும் வழிமுறைகள் கையேட்டிலும் இடம் பெற்றுள்ளன. கவுன்சலிங்கின்போது மூலச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்பதால், மூலச் சான்றிதழ்களை பத்திரமாக வைத்திருக்கவும்.

நேட்டிவிட்டி சர்டிஃபிகேட் யாருக்கு வேண்டும்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை தமிழ்நாட்டில் படித்திருந்தால் அந்த மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பூர்வீக இருப்பிடச் சான்றிதழ் (நேட்டிவிட்டி சர்டிஃபிகேட்) தேவையில்லை. மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் ஏதாவது ஒரு வகுப்பையோ அல்லது அனைத்து வகுப்புகளையுமோ வெளி மாநிலத்தில் படித்திருந்தால்,  பூர்வீக இருப்பிடச் சான்றிதழை தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியரிடம் பெற்று அதன் நகலை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தால், அவர்களது குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். இதேபோல, எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்தில் பணிபுரியும் பொதுத் துறை ஊழியர்களின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். வேலை பார்க்கும் நிறுவனத்தில் சான்றிதழ் பெற்று அதனை விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்திய சர்வீஸ் அதிகாரிகளின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பிலிந்து 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால், அந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குப் பூர்வீக இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், பிற மாநிலங்களில் எட்டாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படித்திருந்தாலும் அந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பூர்வீக இருப்பிடச் சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இலங்கைத் தமிழ் அகதிகள் தலைமை நிலைய தாசில்தாரிடம் அடையாளச் சான்றிதழ் பெற வேண்டும். அகதிகள் முகாமில் பதிவு செய்யவில்லை என்றால் பாஸ்போர்ட், விசா, போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை படித்த விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

எந்தத் தொழில் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம்?

ஜெனரல் மெஷினிஸ்ட், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், எலெக்ட்ரானிக் எக்யூப்மெண்ட்ஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய தொழில் பாடப்பிரிவுகளை பிளஸ் டூ வகுப்பில் எடுத்துப் படித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்கள் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். தொழில் பயிற்சி மாணவர்களுக்குத் தனியே கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

மெரைன் என்ஜினீயரிங், மைனிங் படிப்புகளுக்குத் தனித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் விதிமுறைகளின்படி, மெரைன் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் சராசரியாக குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அதிகபட்ச வயது வரம்பு 25. குறைந்தபட்ச உயரம் 157 செமீ இருக்க வேண்டும். குறைந்தபட்ச எடை 48 கிலோ இருக்க வேண்டும். கண்பார்வை சரியாக இருக்க வேண்டும். இந்தப் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு முன்னதாக, மாணவர்கள் தாங்கள் மருத்துவரீதியாக சரியாக இருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மைனிங் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் ஆண்கள் மட்டுமே சேர அனுமதிக்கப்படுவார்கள்.

சாதிச் சான்றிதழை யாரிடம் பெற வேண்டும்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் நிரந்தர சாதிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்று அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். சாதிச் சான்றிதழ் இணைக்கப்படாவிட்டால், அந்த மாணவர்கள் பொதுப் பிரிவினராகக் கருதப்படுவார்கள். பழங்குடி இன மாணவர்கள் வருவாய்க் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) அல்லது துணை ஆட்சியரிடம் சாதிச் சான்றிதழ் பெற வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் வருவாய் வட்டாட்சியரிடம்  சான்றிதழ் பெற வேண்டும். மிகவும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், தலைமை இடத்து துணை வட்டாட்சியர்ல்லது துணை வட்டாட்சியரிடம் சான்றிதழ்களைப் பெற வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் எப்படி விண்ணப்பிப்பது?

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், அதற்கான  விண்ணப்பப் படிவம் மற்றும் விளையாட்டில் பெற்றுள்ள சாதனைச் சான்றிதழ்களின் நகல்கள், 1-6-2009 முதல் 31-5-2013 வரை  தமிழ்நாட்டிற்காக விளையாடியவர்கள் அதற்குரிய சான்றிதழ் நகல்களுடன் ரூ.100-க்கான டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் 12 இடங்கள் உள்பட மொத்தம் 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வீரரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்குத் தனிக் கவுன்சலிங் நடைபெறும். சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மற்ற பிரிவுகளின்கீழ் உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் அதற்குரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான படிப்புக் கட்டணச் சலுகை பெறுவது எப்படி?

இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களிலிருந்து முதல் தலைமுறையாக பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிப்புக் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் வழங்கப்படும் விளக்கத் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தில் உள்ளபடி உரிய அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும். அத்துடன் மாணவரும் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் குறிப்பிட்ட படிவத்தில் உறுதி மொழி அளித்து கையெழுத்திட வேண்டும். இந்தப் படிவங்களை விண்ணப்பத்துடன்  இணைத்து அனுப்ப வேண்டும்.  விண்ணப்பதாரரின் சகோதரரோ அல்லது சகோதரியோ முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான படிப்புக் கட்டணச் சலுகை பெற்று தொழிற் கல்லூரிகளில் படித்து வந்தால், அந்த மாணவர் இந்தச் சலுகை பெற விண்ணப்பிக்க முடியாது.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுய ஆதரவுப் படிப்புகளிலும் (செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்ஸ்) சேரும் மாணவர்களுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் முதல் தலைமுறை பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகை வழங்கப் படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் படிக்கும் 5 சதவீத மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின்  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். இந்தச் சலுகை பெறும் மாணவர்கள், முதலில் தேர்வு செய்த கல்வி நிறுவனத்தையோ, படிப்பையோ மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. ஏஐசிடிஇ வழங்கும் படிப்புக் கட்டணச் சலுகை பெற விரும்புவபர்கள் அதற்கான விருப்பத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும்.


குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு?

பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் (பின்தங்கிய முஸ்லிம்கள் உள்பட) 45 சதவீதமும் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களும் சீர் மரபினரும் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் 35 சதவீதம் மதிப்பெண் இருந்தாலே விண்ணப்பிக்கலாம். ஆனால், இது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று பொறியியல் கவுன்சலிங் தகவல் விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் குறைந்தது 40 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழங்குகளில், ஏஐசிடிஇக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. “உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். “கவுன்சலிங் தொடங்குதவற்குள் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும் தீர்ப்பின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...