திருப்பூரில் ஜெய்வபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் ரோட்டில் நின்று கொண்டு தொல்லை செய்வதாக புகார் எழுந்தது. இதை தவிர்க்கும் விதத்தில் 2 பெண்கள் பள்ளிகளின் நேரம் நேற்று முன்தினம் முதல் மாற்றப்பட்டது. இதன்படி காலை 8.50 மணிக்கு பள்ளி தொடங்கி மாலை 3.40 மணிக்கு வகுப்புகள் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் சிலர், பள்ளி முடியும் முன்பே புத்தகப் பையுடன் கேட் அருகே சென்றுள்ளனர். இதைப் பார்த்த அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் பைகளை வாங்கிக் கொண்டு பள்ளி முடியும் முன்பு எதற்கு வகுப்புகளை விட்டு வெளியே வந்தீர்கள் என்று திட்டினார். இதுதொடர்பாக, மாணவர்கள் தங்களது வகுப்பு ஆசிரியரிடம் கூறி உள்ளனர். அவர், பையை பிடுங்கி வைத்த ஆசிரியரிடம் ஒரு மாணவனை அனுப்பி அவரது செல்போன் நம்பரை வாங்கினார். அந்த எண் மூலமாக ஆசிரியரிடம் பேசினார். அதன்பிறகு, மாணவர்களின் புத்தகப் பையை ஆசிரியர் திரும்ப கொடுத்துள்ளார். ஆசிரியர் செல்போன் நம்பரை வாங்கி வந்த மாணவன், அந்த நம்பரை தனது வகுப்பு மாணவர்களுக்கு கொடுத்துள்ளான்.
பையை பிடுங்கி வைத்து திட்டியதற்கு பழிவாங்க நினைத்த மாணவர்கள், ஆசிரியர் செல்போனுக்கு தொடர்ச்சியாக போன் செய்ய தொடங்கினர். வெவ்வேறு நம்பர்களில் இருந்து ஆசிரியர் செல்போனுக்கு விடிய விடிய தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசியும், சினிமா காமெடி பாணியில் டவுட் கேட்பது போல பேசியும் தொல்லை செய்துள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர், ரவிச்சந்திரன் என்ற மாணவனை அழைத்து கண்டித்தார். இதற்கிடையில், மாணவனை ஆசிரியர் தாக்கியதாக அவரது பெற்றோருக்கு தகவல் பறந்தது. அவர்கள் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆசிரியர் மீது புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.