ஆரோவில் அருகே நடந்த, இளவட்ட கல் தூக்கும் போட்டியில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். காணும் பொங்கலையொட்டி, ஆரோவில் அருகே உள்ள சஞ்சீவி நகரில், இளவட்ட கல் தூக்கும் போட்டி, நேற்று நடந்தது. இளவட்ட கல், 135 கிலோ எடை
கொண்டது. அதை, தோளுக்கு மேல் தூக்க வேண்டும்.போட்டியில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிலர், இளவட்டக் கல்லை "அலேக்'காக தூக்கி, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். சிலர், மார்பு வரை, இளவட்ட கல்லை தூக்கி, மேற்கொண்டு தூக்க முடியாமல் தோல்வியைத் தழுவினர். போட்டியில், பாலு என்பவர், இளவட்ட கல்லை. மூன்று வினாடிகளில் தூக்கி, முதலிடம் பிடித்தார்.அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், "இளவட்ட கல் தூக்குவது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. மன, உடல் வலிமையும், போதிய பயிற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்' என்றனர்.