"ஆம் ஆத்மி' கட்சியைப் பின்பற்றி, அரியானா காங்கிரஸ் அரசு, மின் கட்டணத்தை பாதியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர், பிருதிவிராஜ் சவானும், "மின் கட்டணத்தை பாதியாக குறைப்பது குறித்து, விரைவில் அரசு அறிவிக்கும்' என, தெரிவித்து
உள்ளார்.
தேர்தல் வாக்குறுதி : டில்லியில், ஆம் ஆத்மி கட்சி பதவியேற்ற உடன், தேர்தல் வாக்குறுதிப் படி, மின் கட்டணத்தை பாதியாக குறைத்து உத்தரவிட்டது. தற்போது அந்த திட்டத்தை, அரியானா அரசும், பின்பற்றத் துவங்கியுள்ளது. அரியானா மாநிலத்தில் தற்போது, 38 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். 5.50 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று, அந்த மாநில முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா வெளியிட்ட அறிக்கையில், "வீடுகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு, 1.30 ரூபாயும், விவசாயிகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு, 25 பைசாவில் இருந்து குறைத்து, இனி, 10 பைசாவும், மின் கட்டணமாக வசூலிக்கப்படும்' என, தெரிவித்துள்ளார்.
யோகேந்திர யாதவ் : இந்த ஆண்டின் பிற்பகுதியில், அரியானா, சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில், அதன் மூத்த தலைவர், யோகேந்திர யாதவ் தான், அரியானா முதல்வர் வேட்பாளர் என, அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து விட்டார். இந்த பின்னணியில், அரியானா அரசின் இந்த மின் கட்டண குறைப்பு அறிவிப்பு, தேர்தலை முன்னிறுத்தி வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது.
மகாராஷ்டிராவிலும்...: இதற்கிடையே, மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவான், நேற்று அளித்த பேட்டியில், அந்த மாநிலத்தில் மின் கட்டணத்தை பாதியாக குறைப்பது குறித்து, அரசு, வரும் 20ம் தேதிக்குள், அறிவிப்பு வெளியிட உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து, அந்த மாநில தொழிற்சாலைகள் துறை அமைச்சர், நாராயண் ராணே தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, செப்டம்பர் அல்லது அக்டோபரில், மகராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.