மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில், ஒவ்வொரு தேர்தலும் ஒரு வரலாறாக இருந்தது ஒரு காலம். ஆனால், இப்போது மக்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து தங்கள்
பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என சொல்லலாம். காரணம், தேர்தலில் பணம் மட்டுமே முக்கிய காரணியாக மாறி விட்டது. ஓட்டுக்கு பணம், வெற்றி பெற்றால் இலவசமாக இதை தருவோம் என்ற கவர்ச்சி அறிவிப்பு களே பெரும்பாலும் தேர்தல் முடிவை தீர்மானிக் கின்றன. அரசியல் கட்சியினரும் தேர்தலின் போது கொள்கை, கோட்பாடுகளை மறந்து விட்டு, எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும் என சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இதனால், கவர்ச்சி அறிவிப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் ஆணையம் முயற்சி எடுத்துள்ளது.
அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டால், அதற்கான சாத்தியக் கூறுகளை விளக்க வேண்டும் என ஆணையம் புதிய விதிமுறை வகுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள் இடம்பெறுவது சட்டப்படி தவறு இல்லை என்றாலும், அவை மக்களை கவர்ந்து நியாயமான தேர்தலை பெரிதும் பாதிக்கச் செய்கிறது. இதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தது.
இந்த உத்தரவு குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டது. ‘மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்கலாம். அதேசமயம், நியாயமான தேர்தலை பாதிக்கும் வகையில் இலவச வாக்குறுதிகள் அளிக்க கூடாது’ என ஆணையம் வலியுறுத்தியது. இதை அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்து விட்டன. இதன்பின், புதிய தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கிறது. அதில், இலவசங்கள் அறிவிக்க முழு தடை விதிக்கவில்லை. ஆனால், இலவச திட்டங்கள் அறிவிக்கும் போது அதற்கான சாத்தியக் கூறுகளையும், நிதி ஆதாரங்கள் குறித்தும் விளக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அரசியல் கட்சிகள் இனி இஷ்டத்துக்கு இலவசங்களை அறிவிக்க முடியாது. ஆனாலும், இது முதல் படிதான். அடுத்த கட்டமாக, தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களுக்கு முழு தடை விதிக்க ஆணையம் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும்.