முன்மாதிரி அரசுப்பள்ளி ஆசிரியர் இரா. வேணுகோபாலகிருஷ்ணன்


பெற்றோர்கள் ஏழைகளாக இருந்தாலும் கடன் பெற்றாவது கட்டணம் செலுத்தித் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கே தற்போது விரும்புகின்றனர். இதனால், தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக் குறைந்ததோடு, சில இடங்களில் பள்ளிகளை மூட வேண்டிய நிலைமையும் உருவாகி
வருகிறது. மாணவர்களைத் தனியார் பள்ளிகளுக்குப் பெற்றோர்கள் அனுப்புவதற்கு அங்கு ஆங்கில வழிக் கல்வி, நல்ல கட்டமைப்பு வசதி முதலியவற்றோடு நல்ல கற்பித்தல் திறனையும் காரணமாகக் கூறுகின்றனர். இந்நிலையில் தமது பணியின் கடமை உணர்விற்கு மேலாக, மாணவர்களின் நலனுக்கும் பள்ளி வளர்ச்சிக்கும் தம் சொந்த நிதியிலிருந்தே ரூ. 1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து, இன்றைய ஆசிரிய சமுதாயத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார் ஓர் இளம் ஆசிரியர். அந்த இளம் நல்லாசிரியர் (இது அரசு தந்த விருது அல்ல) திரு. பிராங்கிளின். அவருக்கு உறுதுணையாக இருப்பவர் தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி. கோவை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய வட்டாரமான காரமடை வட்டாரத்தில் காரமடையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது இராமம்பாளையம். ஏழைக் குடிமக்களே அதிகம் வாழும் இந்த ஊரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்தான் இவர் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் சுமார் அரை ஏக்கருக்கும் குறைவான இடப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஈராசிரியர் பள்ளியில், பல தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கே கிடைக்காத கல்வியையும், வாழ்வியல் பயிற்சிகளையும் தந்து கொண்டிருக்கிறார் திரு. பிராங்கிளின். இப்பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் கிரானைட் தரை, தேர்மோகூல் கூரை அமைக்கப்பட்ட வகுப்பறைகள், மாணவர்களுக்காக 12 கணினிகளைக் கொண்ட கணினி அறை, மாணவர்கள் அமர்ந்து படிக்க வட்ட வடிவ மேசைகள், இருக்கைகள், மின் விசிறிகள், ஒலிபெருக்கிகள், நவீன விளக்குகள், குடிக்க வெந்நீர், பிற பயன்பாட்டிற்குத் தண்ணீர், முதலுதவிப்பெட்டி, தீயணைப்புக் கருவி, கல்விக்கெனத் தொலைக்காட்சிப்பெட்டி, டி.வி.டி. பிளேயர், நடப்பதற்கென நடைபாதை எனச் சொல்லிக்கொண்டே போகப் பல சிறப்புகள்! இவையனைத்திற்கும் திரு. பிராங்கிளினின் தொண்டுள்ளமும் அதற்குத் தலைமை ஆசிரியை திருமதி சரஸ்வதி, அரசு அலுவலர்கள் மற்றும் கொடையுள்ளம் கொண்டோரின் ஆதரவும் ஒத்துழைப்புமே காரணம். சொந்தச் செலவில் அரசுப் பள்ளியைச் சீரமைத்து மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் பிராங்கிளினுக்கு எப்படி வந்தது? அவர் சொல்கிறார்: பொதுவாக, கிராமப்புற அரசுப்பள்ளி என்றாலே கேவலமாக, ஏளனமாகப் பார்க்கும் எண்ணம்தான் பொதுமக்களிடம் உள்ளது. ஏன் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர மறுக்கிறார்கள்? கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு, கற்றுத் தருவதில் குறைபாடு இருப்பதாக மக்கள் நினைக்கலாம். அதிலிருந்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். என்ன வகையான மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்? முதலில் பள்ளி நல்ல பள்ளியாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்ல கல்வி கொடுக்க வேண்டும். ஒரு காலத்தில் 100 மாணவர்களுக்கு மேல் படித்துக்கொண்டிருந்த இப்பள்ளியில் பின்னர் 27 பேர்களாகக் குறைந்து போய்விட்டனர். இதை மாற்ற எண்ணினேன். மக்கள் ஒத்துழைப்பில்லாமல் எந்தப் பள்ளியையும் முன்னேற்ற முடியாது. எனவே, உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் பங்களிப்பு இருக்கக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க எண்ணித் தலைமையாசிரியையிடம் கூறினேன். தலைமை ஆசிரியையும் இதற்கு ஒப்புக் கொண்டார். 2010-2011-இல் ஒரு வகுப்பறையைத் தலைமை ஆசிரியையும் நானும் தலா ரூ. 25 ஆயிரம் சொந்த நிதியுடனும் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடனும் கட்டினோம். இதையறிந்து மாவட்ட ஆட்சியர் அளித்த ரூ. 3 லட்சம் உதவியுடன் இன்னொரு வகுப்பறை கட்டப்பட்டது. அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலம் கிடைத்த ரூ. 3 லட்சத்து 8 ஆயிரம் தொகையைக் கொண்டு பள்ளிக்கு முன்பக்க மதில் சுவர் கட்டப்பட்டது. பின் அரசு தந்த ரூ. 5 லட்சம் நிதியுடன் நாங்கள் ரூ. 2 லட்சம் திரட்டி இன்னொரு வகுப்பறை கட்டினோம். அரசின் நமக்கு நாமே திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நமது பங்கு ரூ. 60 ஆயிரம் செலுத்தி, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவி பெற்றுப் பள்ளியில் உள்ள கணினிகளுக்காக யு.பி.எஸ். வாங்கப்பட்டுள்ளது. கிடைத்ததைக் கொண்டு வளர்ச்சிப் பணிகளைச் செய்தோம். யாரையும் வற்புறுத்தவில்லை என்கிறார். எந்த வகையிலாவது ஏதேனும் ஒரு சிறு தொகை கிடைத்தாலும் பள்ளிக்கே செலவழிக்கின்றனர். தலைமையாசிரியைக்கு அரசு நல்லாசிரியர் விருது அளித்த போது தரப்பட்ட தொகை ரூ. 5 ஆயிரத்தைப் பள்ளிக்கே தந்து விட்டார். கல்வியமைச்சரின் அழைப்பின் பேரில் அவரைச் சந்திக்கச் சென்ற திரு. பிராங்கிளின் அதற்காகத் தரப்பட்ட போக்குவரத்துச் செலவுத் தொகை ரூ. 1500-ஐயும் பள்ளிக்கே தந்து விட்டார். பள்ளிக்காகச் செய்யும் பணியில் கிடைக்கும் எந்தத் தொகைக்கும் நாம் உரிமை கொண்டாட முடியாது என்கிறார். சுற்றுப்புற ஊர்களிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரச் சரியான நேரத்திற்குப் பேருந்து வசதி இல்லாததால், அரசிடம் விண்ணப்பித்து நிதியுதவி பெற்று, ஊர்தி வசதி ஏற்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஒரு மாணவருக்கு மாதம் ரூ. 300 என்று அரசு நிதியுதவி வழங்குகிறது. ஊர்திக்கு இந்தத் தொகை போதுமானதாக இல்லாததால், தலைமையாசிரியையும் பிராங்கிளினும் சேர்ந்து ரூ. 1000 கூடுதல் தொகையைச் சொந்தப் பணத்திலிருந்து வழங்குகின்றனர். இந்தப் பள்ளியைப் பார்த்து அரசே பொள்ளாச்சி, ஆனைகட்டி, காளிமங்கலம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் இம்மாதிரி வகுப்பறைகள் கட்டி, வட்டவடிவ மேசைகள் அமைத்துத் தந்துள்ளது. ஆனால், அவற்றில் இங்குள்ள பிற வசதிகள் இல்லை. 27 பேர்களாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்திருக்கிறது. சிறந்த கல்வியைப் பெறும் இம்மாணவர்களில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்பது சிறப்பு. பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். என்னதான் இங்கு ஆசிரியர்கள் கற்பித்தாலும் வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுத்துத் தீய பழக்கங்கள் அணுகாதவாறு பாதுகாக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலையில், பள்ளியிலேயே மாலை நேர வகுப்புகள் மாலை 5.30 முதல் 7.30 வரை நடத்தப்படுகின்றன. இதற்கு ஜப்பானில் இருக்கும் திரு. வேல்முருகன் என்பவரது நிதி உதவியுடன் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் மூலம் மாலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மாலை நேர வகுப்புகளில் பள்ளிப் பாடங்களைத் தாண்டி, புத்தக வாசிப்பு, கலைப்பொருள்கள் தயாரிப்பு, செய்தித்தாள் வாசிப்பு முதலான பல பணிகள் நடைமுறையில் உள்ளன. மாணவர்களை நல்வழிப்படுத்த யோகா வகுப்பு இங்கு தொடங்கப்பட்டது. அது போக, கராத்தே, சிலம்பம் முதலியன கற்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். மாலை 4 முதல் 5 மணி வரை இணைய தளம் மூலம் ஆங்கில வாசிப்புப் பயிற்சி தரப்படுகிறது. சென்னையிலுள்ள துளிர் என்னும் ஆங்கிலப் பயிற்சி நிறுவனம் இந்தப் பயிற்சியைத் தருகிறது. இதற்கு, ஸ்ரீதர் என்ற ஆடிட்டர் உதவி செய்துள்ளார். காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறைகளில் இங்கு முகாம் நடத்திக் கதை கூறுதல், நாடகம் நடித்தல், திரைப்படம் திரையிடுதல் முதலியன நடத்தப் படுகின்றன. குழந்தைகளுக்குச் சிறந்த முறையில் கதைகளைக் கூறுவது, கற்பனை வளத்துடன் நல்ல எண்ணங்களைப் புகட்டுவது, அழிந்து வரும் நாடகக் கலையைக் காக்க நாடகம் நடத்தக் கற்பிப்பது ஆகியன நோக்கங்கள். இதில், குழந்தைகளுக்கான உலகப்புகழ் பெற்ற திரைப்படங்கள் திரையிட்டுக் காட்டப்படுகின்றன. இதில் பெரிய நகரங்களிலுள்ள பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், தகவல் தொழில் நுட்பத்துறை வல்லுநர்கள் முதலியோர் வந்து மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகளிடம் மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது. தாய்மொழி உணர்வு நன்கு ஊட்டப்படுகிறது. அதேவேளை ஆங்கில அறிவும் புகட்டப்படுகிறது. ஆங்கில இதழ்கள் வாசிப்புப் பயிற்சி, தமிழ் வாசிப்புப் பயிற்சி, நூலகத்தில் நூல்கள் வாசிப்புப் பயிற்சி, ஆளுமைப் பண்புப் பயிற்சி, இணையதளத்தில் பயிற்சி, இவர்களது பாடத்தைக் கணினியில் இவர்களே பவர் பாயிண்ட்டில் தொகுக்கும் பயிற்சி முதலியன தரப்படுகின்றன. ஜப்பானிலிருந்து வாங்கி வைத்துள்ள நானோபிளாக் பொருத்துக் கருவி மூலம் குழந்தைகள் ரோபோ போன்ற நிறைய மாதிரிகளை உருவாக்குகிறார்கள். தொழில்நுட்ப அறிவு வளர்ச்சியைக் குழந்தைகளுக்கு நிறையக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்பதற்காக இதைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இது வேறு எந்த அரசுப் பள்ளியிலும் இல்லாத ஒன்று. ஒரு நானோ பிளாக்கை வைத்துக் கொண்டு தங்கள் கற்பனை வளத்திற்கு ஏற்ப ஏதோ ஒன்றைக் குழந்தைகள் உருவாக்குகின்றனர். மாணவர்களுக்குப் பெற்றோர்கள் தரும் ஒவ்வொரு பைசாவும் அவர்களுக்கெனப் பள்ளியின் மூலம் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது. இதனால், சிறு வயதிலேயே மாணவர்களுக்குச் சேமிப்புப் பழக்கம் ஏற்படுத்தப் பட்டதோடு, வீணாகச் செலவு செய்யும் பழக்கம் ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் திட்ட அலுவலராகப் பணியாற்றும் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்பள்ளிக்கு வந்து பள்ளியின் செயல்பாட்டைப் பார்த்துச் சென்றிருக்கிறார். அவர் தாம் பணியாற்றும் இடத்திலும் தமது சொந்த ஊரிலும் இது போல் பள்ளிகளைச் செயல்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். இப்பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் திரு. ஜி. ராமகிருஷ்ணன் இங்கே நேரில் வந்து பள்ளியின் செயல்பாடுகளைப் பார்வையிட்டுப் பாராட்டிச் சென்றுள்ளார். இப்பள்ளிக்குச் சிறந்த அரசுப்பள்ளி என்ற விருதினை 2012-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியுள்ளது. ஆசிரியர் பிராங்கிளினுக்கும் 2013-&ஆம் ஆண்டு கல்வித்துறை மேம்பாட்டு விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. அரிமா சங்கமும் இவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. பள்ளிக்கு உள்ள ஒரே குறைபாடு இடப்பற்றாக்குறைதான். அரை ஏக்கருக்கும் குறைவான இடப்பரப்பில் இப்பள்ளி செயல்படுவதால் விளையாடவோ, தோட்டம் அமைக்கவோ இடம் இல்லை. இதனால், உயர்நிலைப் பள்ளியாகவோ, நடுநிலைப்பள்ளியாகவோ தரம் உயர்த்த இயலாத நிலை உள்ளது. தொடக்கப் பள்ளிப் படிப்புக்கு மேல் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் 4 கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது. கல்வி வள்ளல்கள் யாரேனும் அருகில் இடம் வாங்கித் தந்தால் பள்ளி நடுநிலைப் பள்ளியாகவோ, உயர்நிலைப் பள்ளியாகவோ தரம் உயரும் என்கிறார் பிராங்கிளின். இத்தனை வளர்ச்சிப் பணிகளையும் மாணவர்கள் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் இப்பள்ளிக்குத் தந்து கொண்டிருக்கும் திரு. பிராங்கிளின் நாளை வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் சென்று விட்டால் இப்பள்ளி இதே போக்கில் வளர்ச்சிப் பாதையில் செல்லுமா? நிச்சயமாகத் தொடரும். ஊர் மக்களை அந்த அளவிற்குத் தயார் செய்துள்ளோம். அவர்கள் இப்பள்ளியோடு கொண்டுள்ள தொடர்பு அடுத்து வரும் ஆசிரியரையும் இவ்வாறே செயல்படச் செய்யும் என்கிறார். செலவு செய்து படிக்கும் பல தனியார் பள்ளிகளில் கிடைக்காத வாழ்வியல் பயிற்சிகளையும் கல்வியையும் பின்தங்கிய பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கொடுத்து வருகிறார் திரு. பிராங்கிளின். சொந்தப் பணத்தில் செலவு செய்து மாணவர்களுக்கு உதவும் இவர் பெரிய வசதி படைத்தவருமல்ல. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஒவ்வோர் ஆசிரியரும் பிராங்கிளின்களாக மாறினால், தமிழக மாணவர்கள் கல்வியிலும் பண்பிலும் மேம்பாடடைவர் என்பது உறுதி. திரு. பிராங்கிளினின் தொலைத் தொடர்பு எண்: 99424 72672. பெட்டிச் செய்திகள் 1. திரு. பிராங்கிளின் ஆசிரியப்பணிக்கு வருவதற்கு முன்பே, மேட்டுப்பாளையத்தில் படிப்பறிவில்லாத கூலித்தொழிலாளர்கள் உள்ள சேரிப்பகுதியில் படிக்காத தொழிலாளிகளுக்குக் காலை, மாலை வேளைகளில் 10 ஆண்டுக்காலம் கல்வி கற்பித்துப் படிப்பறிவுள்ளவர்களாக ஆக்கியுள்ளார். அன்றைக்கு இவரிடம் கற்றவர்கள் இன்றைக்கு அப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனால் அங்கு பல பட்டதாரிகள் உருவாகி வருகிறார்கள். 2. திரு. பிராங்கிளின் ஆசிரியர் பயிற்சி பெற்றது கோவை பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில். ஒரு மனிதனை முழுமையாக்குவதற்காள பயிற்சி அங்கே எனக்குக் கிடைத்தது என ராமகிருஷ்ண மிஷன் பற்றிப் பெருமையாகக் கூறுகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...