தமிழகத்தில் 9,428 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குசாவடிகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி, அரசியல்வாதிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது. வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ரூ.10 லட்சம் வரை எடுத்துச் செல்லலாம். பணம் எடுத்துச் செல்வதற்கான உறுதியான ஆதாரங்களை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.
அதேபோன்று, அரசியல்வாதிகள் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது, கலவரத்தை தூண்டுவது போல் மேடைகளில் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளது. இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை சோதனை செய்ய, தமிழகம் முழுவதும் 705 பறக்கும் படைகள் மற்றும் 705 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒரு மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் ஒரு அரசு உயர் அதிகாரி, 3 அல்லது 4 போலீசார், ஒரு வீடியோ கேமரா மேன் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் கடந்த 6ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நடத்திய வாகன சோதனையில் இதுவரை ரூ.14 கோடி ரூபாய் வரை பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில போலீசார் கண்காணிப்பு பணியில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளக் கூடும் என்பதற்காக வெளிமாநில போலீசார் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தற்போது 32 பட்டாலியன் வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இவர்களை மாவட்டத் துக்கு ஒரு பட்டாலியன் வீதம் 32 மாவட்டத்துக்கும் தனித்தனி குழுவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பறக்கும் படையினருடன் இணைந்து நேற்று முதல் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமை செயலகத்தில் உள்ள மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 29ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அன்று முதல் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவின பார்வையாளராக இரண்டு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள அந்த 78 ஐஏஎஸ் அதிகாரிகளும் வரும் 29ம் தேதி தமிழகத்திற்கு வருகின்றனர். அவர்கள், தேர்தல் முடியும் வரை இங்கேயே தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள், டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷ னுக்கு அறிக்கை அனுப்புவார்கள். இதுதவிர தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர்களும் ஏப்ரல் 5ம் தேதிக்கு பிறகு தமிழகம் வருவார்கள்.
தமிழகம் முழுவதும் 60,418 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் கடந்த தேர்தலில் ஏற்பட்ட மோதல் மற்றும் மிரட்டல் சம்பவம், அதேபோன்று குறைவான வாக்குப்பதிவு மற்றும் அதிகளவு வாக்குப்பதிவு நடந்த மையங்களை கிரிட்டிக்கல் பூத் (பதற்றமான வாக்குச்சாவடி) என கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 9,428 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுவான தேர்தல் பார்வையாளர்கள் வந்தபிறகுதான் இது இறுதி செய்யப்படும். அதேபோன்று தற்போது வாகன சோதனைக்காக 32 பட்டாலியன் துணை ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் பாதுகாப்புக் கான மேலும் 100 பட்டாலியன் துணை ராணுவத்தினர் வர உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.