அரை காசு சம்பளம் என்றாலும், அது அரசாங்க சம்பளமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த அரசு வேலைவாய்ப்பை எண்ணி நாள்தோறும் தவம் கிடக்கின்ற இளைஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அந்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய
ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலான தகவல்களில் ஒன்றுதான் மத்திய அரசால் அண்மையில் வெளியிடப்பட்டது. ‘மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60ல் இருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளது’ என்று செய்தி தான் அது.மத்திய அரசு ஓய்வுபெறப்போகும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பென்ஷன் தொகையை தள்ளிப்போடவே இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து அறிவிக்க உள்ளது என்ற காரணம் கூறப்பட்டாலும் இது நாடு முழுவதும் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் நடவடிக்கை என்ற குரல்களும் கூடவே ஒலிக்க தொடங்கியுள்ளன.
லீவ் சரண்டர், கிராஜுவிட்டி, கம்யூட்டேஷன், ஜிபிஎப் என்று ஒவ்வொரு ஓய்வு பெறுகின்ற மத்திய அரசு ஊழியருக்கும் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வரை மொத்தமாக வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு. வரும் இரண்டாண்டுகளில் அதிகபட்ச அளவில் ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதால் அதற்காக பெரும் தொகை செலவிட வேண்டிய நிலையில் அதனை தள்ளிப்போட இந்த வயது வரம்பு அதிகரிப்பு பயனை கொடுக்கும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.ஆனால் படித்து பல பட்டங்களை பெற்றுவிட்டு, நாள்தோறும் நுழைவுத்தேர்வுகளையும், போட்டித்தேர்வுகளையும் எழுதி வேலைக்காக காத்திருக்கின்ற இளைஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் நாடு சந்திக்கின்ற மிகப்பெரிய பிரச்னையில் ஒன்றாக இருந்து வருகிறது. படித்து பட்டம் பெற்றவர்கள் வெளிநாடு வேலைகளை தேடிச்செல்கின்றனர். பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பிடித்த இளைஞர்களை இந்தியா முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறது என்பதைவிட, சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
இதன் வெளிப்பாடு உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் முக்கிய இடங்களில் இந்தியர்களின் பங்களிப்பு வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளது. 60 வயதுக்கு மேல் எந்த மாநிலமும் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை நிர்ணயம் செய்யவில்லை. படித்தவர்கள் நிறைந்த மாநிலமான கேரளாவில் ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு 56 தான். ஜார்க்கண்டிலும் 56 ஓய்வுபெறும் ஊழியர்களின் வயது வரம்பாக உள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது.குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது.அப்படியிருக்க மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை மட்டும் 62 ஆக உயர்த்துவதின் மூலம் அது பிற மாநிலங்களுக்கும் மோசமான ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிட கூடாது என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது.
60 வயது நிரம்பியவர்களை இரண்டாண்டுகள் பணிக்காலத்தை நீட்டிக்கும் வேளையில் அடுத்தகட்ட பதவி உயர்வுடன் பணிக்கொடை உள்ளிட்ட அவர்களுக்கான நிதி செலவினங்களும் எகிறவே செய்யும். இது மறைமுகமாக மத்திய அரசுக்கு மேலும் செலவினத்தையே கொடுக்கும்.இந்திய நாட்டில் மொத்த மக்கள்தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கை 56 சதவீதம் ஆக உள்ளது. பாதிக்கும் மேல் 25 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். மத்திய அரசில் தற்போது 31 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 3 லட்சம் பேர் ஆண்டுதோறும் ஓய்வுபெறுகின்றனர்.நாட்டில் இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு இல்லாத நிலை கிராமங்களில் 36.6 சதவீதமும், நகரங்களில் 26.5 சதவீதம் உள்ளதாகவும், கல்வி அறிவு பெறாத இளைஞர்களில் வேலை இல்லாதவர்கள் நிலை 37 சதவீதம் உள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஓய்வு வயது வரம்பு அதிகரிப்பின் மூலம் ஆண்டுதோறும் 3 லட்சம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வேலைவாய்ப்புகள் தள்ளிப்போகும் நிலை ஏற்படும்.
இது தொடர்பாக ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘முன்பெல்லாம் 20, 21 வயதில் ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைத்துவிடும். படித்து முடித்தாலே வேலை உண்டு என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது வேலைவாய்ப்பில் பலத்த போட்டி நிலவுகிறது. ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க 35 வயதாகிறது. அதன் பிறகு அவர்கள் 25 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய இயலும். இதனால் அவருக்கு முழுமையான ஓய்வூதியம் கிடைக்காது. 30 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே ஒரு அரசு ஊழியருக்கு முழுமையான ஓய்வூதியம் கிடைக்கும் நிலை உள்ளது. வயது வரம்பை நீட்டிப்பதால் 60 வயது நிரம்பியவர்களின் பணி அனுபவம், வேலைத்திறன் மேலும் 2 ஆண்டுகள் கிடைக்கும்.
இருப்பினும் வயதுவரம்பை நீட்டிப்பதின் மூலம் படித்த இளைஞர்களுக்குத்தான் கண்டிப்பாக அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு மட்டுமின்றி எந்த ஒரு அரசும் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் முடிவு மேற்கொள்ளக்கூடாது. குறிப்பிட்ட துறைகளில் தகுதிவாய்ந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கி பணியில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளலாம்’ என்றார்.ஒரு நாடு வளம்பெற அந்நாட்டின் மனித வளம் முக்கியமான ஒன்று. அது அந்த அரசால் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு அரசு துறைகளில் இளைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற வேலைவாய்ப்புகள்தான். அரசு அதற்கான கதவுகளை இளைஞர்களுக்காக திறந்து வைக்காவிட்டாலும், மூடாது இருக்க வேண்டும்.