சிறப்பு முகாம்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 24-ந் தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி கடந்த மாதம் 10-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர்
சேர்க்க தவறியவர்களுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க இறுதி வாய்ப்பு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,114 வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இங்கு இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பம்
இதில் கடந்த தேர்தல்களில் வாக்களித்தவர்களாக இருந்தாலும் கூட, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்காக, நேற்று வாக்குச்சாவடிகளுக்கு வந்து இருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் தங்கள் பெயர் இருக்கிறதா? என்று சரிபார்த்து சென்றனர். சிலருக்கு முகவரி மாற்றம் காரணமாக பெயர்கள் விடு பட்டு இருந்தன. ஆனால் அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருந்தனர். இதுபோன்று இருந்த வர்களை, அங்கிருந்த அதிகாரிகள், தற்போது குடியிருக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று புதிதாக படிவத்தை பூர்த்தி செய்ய அறிவுரை கூறினார்கள்.
கலெக்டர் ஆய்வு
மேலும் கடந்த முறை விண்ணப்பித்து பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், மற்றும் விண்ணப்பிக்க தவறிய தகுதியான வாக்காளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பெயர் சேர்ப்பதற்குரிய படிவம்6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், அந்த விண்ணப்பங்களை அங்கேயே சரிபார்த்து ஒப்புகை சீட்டை கொடுத்தனர்.
அவினாசி, பல்லடம், திருப்பூர், பொங்கலூர், பெருமாநல்லூர், பிச்சம் பாளையம், போயம்பாளையம், மங்கலம், கொடுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான ஜி.கோவிந்தராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஆர்.டி.ஓ. பழனிக்குமார், தாசில்தார்கள் அகமதுல்லா, தேவமனோகரன், உதவி ஆணையாளர்(கலால்) மாரியம்மாள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் சென்றனர்.
கமிஷனர் ஆய்வு
இதுபோல் திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரிச்சிப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமை திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான அசோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி கமிஷனர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.