ஆண்டு விழா என்ற பெயரில் தனியார் பள்ளிகள் அடிக்கும் கூத்து, எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. ஆண்டு இறுதியில் மாணவர்களின் திறமையை வெ ளிப்படுத்தும் விதமாக, பேச்சு, கட்டுரை,
நாடகம், பாட்டு என பல போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது காலம் காலமாக அரசுப்பள்ளிகளிலும் நடந்து வருவது தான். கற்றல் கற்பித்தலின் தொடர்புடைய இந்த செயல்களும் பாடம் தான் என்ற வகையில், இது அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
ஓரங்க நாடகம், செய்தி வாசிப்பது, என பலவிதமாக மாணவர்களின் கற்பனை வளத்திற்கு, இவை களமாக விளங்கியது அந்த காலம்.(2000க்கு முன்பு என வைத்துக்கொள்வோம்.
தற்போது, தொழில்நுட்ப புரட்சி வளர்ந்து விட்டது. திரைப்படங்களும் கிராமப்புறத்தில் யதார்த்தமான காட்சிகளை, கதைகளை எடுத்து புரட்சியை ஏற்படுத்தி வெற்றி பெற்று வருகின்றன.
ஆனால், தனியார் பள்ளிகளில், ஆண்டு விழாவிற்காக, ஆடம்பர உடை கட்டாயப்படுத்தப்படுகிறது. இதற்காக தனியே பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படு்ம். அதை, அந்த விழாவில் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், டப்பாங்குத்து, வன்முறையை துாண்டும்விதமான பாடல்களுக்கு, சிறுவர்களை நடனம் ஆட பழக்குவது. இதற்காக, குறைந்தது இரண்டு வாரங்களுக்கு பயிற்சி.
ஆண்டு இறுதித்தேர்வின் போது, படிப்பில் கவனம் செலுத்தாமல், மாணவர்களின் நேரத்தை வீணாக்குகின்றன தனியார் பள்ளிகள்.
2000க்கு முனனர், மாணவர்கள் இது போன்று தனியாக பயிற்சியில் ஈடுபட்டது கிடையாது. ஓரே நாளில் தங்களின் கருத்துக்களை ஒருங்கிணைத்து, மேடையேற்றினர். அதில், தவறுகள் நடந்தாலும், பார்வையாளர்களிடம் அதற்கும் பெரும் வரவேற்பு இருந்தது. பிரத்யேக ஆடைகளும் பயன்படுத்தியது இல்லை.
இன்று வியாபார நோக்கத்துடன் விளம்பரத்திற்காக, மாணவர்களை நடிகர்களாக்கும் முயற்சியில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன.
50 மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளிகள் கூட, விழா நடத்தி விளம்பரம் தேடுகின்றன. தெருவுக்கு 4 தனியார் பள்ளிகள், 4 விழாக்கள். டப்பாங்குத்து பாடல்களுக்கு அற்புதமாக நடனமாடும் தங்கள் பிள்ளைகளை ரசிக்கும் பெற்றோர் உள்ளவரை, தனியார் பள்ளிகளின் கொட்டம் தொடரும்.
அரசுப்பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தற்போது இதுபோன்ற விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லுாரி சாலையில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தை, கோடம்பாக்கத்திற்கு மாற்றிவிடலாமா?