தெற்கு இந்திய பெருங்கடலில் மலேசிய விமானம் நொறுங்கியது உறுதி: பிரதமர் சோகத்துடன் அறிவிப்பு


மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவும், சீனாவும் 3 மர்ம பொருட்களை
கண்டுபிடித்துள்ளன. இப்பொருட்களை ஆஸ்திரேலிய கப்பல்கள் நெருங்கியுள்ளன. அதே நேரத்தில், மலேசிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது. விமானத்தை தேடும் பணியில் 25க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கிடப்பதாக செயற்கைகோள் மூலமாக ஆஸ்திரேலியாவும், சீனாவும் கண்டுபிடித்தன. அப்பகுதியில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில், தெற்கு இந்திய பெருங்கடலில் 2 மர்மபொருள் கிடப்பதை பார்த்ததாக ஆஸ்திரேலியாவும், மற்றொரு பொருளை பார்த்ததாக சீனாவும் நேற்று உறுதி செய்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நாடாளுமன்றத்தில் நேற்று கூறுகையில், ‘பழுப்பு அல்லது பச்சை நிறத்தில் வட்டவடிவிலான ஒரு பொருளும், ஆரஞ்ச் நிறத்தில்  செவ்வக வடிவிலான ஒரு பொருளும் கிடப்பதை ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. இதே போல, மற்றொரு இடத்தில் வெள்ளை நிறத்தில் சதுர வடிவிலான ஒரு பொருளை பார்த்ததாக சீனா உறுதி செய்துள்ளது. இவை மாயமான மலேசிய விமானத்தில் உடைந்த பாகங்கள்தானா என உறுதியாகவில்லை. இப்பொருட்களை கைப்பற்ற ஆஸ்திரேலிய கப்பல்கள் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளன’ என கூறியுள்ளார்.

இத்தகவலை மலேசியாவும் உறுதி செய்துள்ளது. மர்ம பொருட்களை கைப்பற்ற சீன கப்பல்களும் விரைந்துள்ளன. அதே நேரத்தில், விமான மாயம் தொடர்பாக மலேசிய அரசு தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மலேசிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹூசேன் நேற்று அளித்த பேட்டியில், ‘விமானிகளின் குடும்பத்தினர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை நடந்துள்ளது. தொடர்பு துண்டிப்பதற்கு முன்பு வரை விமானிகள் கட்டுப்பாட்டு அறையுடன் பேசிய உரையாடல்கள் முழுமையாக தெரியவந்துள்ளது. இதை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது’ என கூறியுள்ளார்.

தெற்கு இந்திய பெருங்கடலில் கிடக்கும் மர்ம பொருட்களை, ஆஸ்திரேலியா மற்றும் சீன கப்பல்கள் இன்றைக்குள் கைப்பற்றி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று உறுதி செய்துள்ளார். நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘விமானம் எம்எச்-370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கி விட்டது என்பதை ஆழ்ந்த சோகத்துடன் உறுதி செய்கிறேன். பிரிட்டன் செயற்கைகோள் அனுப்பிய தகவலின் அடிப்படையில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


கறுப்பு பெட்டியை தேட நவீன கருவி
மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியை தேட, அமெரிக்க கடற்படையின் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தப்பட உள்ளது. அமெரிக்க கடற்படை நேற்று விடுத்த அறிக்கையில், ‘கடலில் மூழ்கிய விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்காகவே டிபிஎல்-25 சிஸ்டம் என்ற பிரத்யேகமாக கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கறுப்பு பெட்டி விழுந்திருந்தாலும் கூட இக்கருவி மூலம் கண்டுபிடித்து விடலாம். இதனை மலேசிய விமானம் தேடும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...