அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் திண்டுக்கல்லில் ஆசிரியர் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்குவதில்
தாமதம் ஏற்பட்டதை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுலவகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊதியம் வழங்க தாமதமானதை கண்டித்தும் உடனடியாக ஊதியம் வழங்கக் கோரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில், நூறுநாள் வேலைத் திட்டத்தில் 3 மாதமாக கூலி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. கூலி வழங்கப்படாதது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டதற்கு வங்கியில் பணம் செலுத்தி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களது கணக்கில் பணம் வரவில்லை என வங்கியில் கூறியுள்ளனர். கூலி வழங்காததை கண்டித்து பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.