தமிழனை மிருகமாக்கும் அரசு!


சவூதிஅரேபியா போன்ற ஒருசில நாடுகளை தவிர, உலகின் எல்லா நாடுகளிலும் மது விற்கப்படுகிறது.
மது அருந்தும் பழக்கம் அதிகம் உள்ள ஐரோப்பிய நாடுகள்,

தாய்லாந்து போன்ற கிழக்காசிய நாடுகள், சீனா ஆகியவற்றில், மதுவினால் யாரும் இறந்ததாக செய்தி இல்லை. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் குடியினால் குடும்பங்கள் சிதைகின்றன. மனிதர்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே சாகின்றனர். இதன் காரணமாக, மதுவை ஒழிக்க வேண்டும் என்று, சில அமைப்புகளும், தனிநபர்களும் போராடுகின்றனர்.
இப்படி போராடுபவர்கள், ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க தவறுகிறார்கள். மது அருந்தும் மற்ற நாடுகளில், தமிழ்நாட்டில் காணப்படும் மதுவினால் உருவாகும் பிரச்னை கள் ஏன் இல்லை? நாடுகளை விடுங்க, நம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில், குடி ஏன் அவர்கள் குடியைக் கெடுப்பதில்லை? குடித்துவிட்டு, யாரும், அங்கே தெரு ஓரங்களில் படுத்துக் கிடப்பதில்லையே, ஏன்? இதுபற்றி நான் பல கள ஆய்வுகளை செய்தேன். பலரிடமும் பேசினேன். அதன் சுருக்கம் தான் இந்த கட்டுரை.
எனக்கு, நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக பிடித்த அரசியல்வாதி ஜெயலலிதா. ஆனால், மோடிக்கு இல்லாத ஒரு பிரச்னை, ஜெயலலிதாவுக்கு உண்டு. அது கருணாநிதி. மோடிக்கு கருணாநிதியை போன்ற எதிரி கிடையாது. எனவே, வாக்கு வங்கியை மனதில் கொண்டு கருணாநிதி என்னவெல்லாம் செய்தாரோ அதையே ஜெயலலிதாவும் செய்ய வேண்டிய கட்டாயம் இங்கே உருவாகிறது.
முக்கியமாக, இலவசங்கள் மற்றும் "டாஸ்மாக்'. இந்த இரண்டையும் ஜெயலலிதா அரசினால் நிறுத்த முடியவில்லை. நிறுத்தினால் கருணாநிதிக்கு வசதி ஆக போய் விடும் என்று, நினைக்கிறார் ஜெ., "டாஸ்மாக்'கில் இருந்து, கடந்த ஆண்டு, அரசுக்கு வருமானம் 21,680 கோடி. இது தான் இலவசங்களுக்கான நிதி ஆதாரம். ஜெ., ஆட்சிக்கு வந்தவுடனேயே இலவசங் களை நிறுத்தி விட்டு, மது விற்பனையை தனியாரிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்போதும் அரசுக்கு வருமானம் குறைந்திருக்காது. எப்படியென்றால், உணவு விடுதிகளில் மது விற்பனை மூலம் வரி வசூலித்திருக்கலாம். தனியார் மது வியாபாரிகளிடம் இருந்தும் வரி வசூலித்து இருக்கலாம். கர்நாடகாவில் இப்படித்தான் செய்கின்றனர். மதுவிற்பனையை, அரசே தன் தனி உரிமையாக வைத்திருப்பதில் இரண்டு பிரச்னைகள் உள்ளன.
முதல் பிரச்னை: ஒரு மக்கள் நல அரசு என்றால், கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டைத்தான் அரசு வைத்து இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில், அது இரண்டும் தனியாரிடம் உள்ளது. எல்.கே.ஜி.,யில் சேர்ப்பதற்கே இங்கே லட்சக் கணக்கில் வாங்கும் பள்ளிகள் ஏராளம். மருத்துவம் பற்றி பேசவே வேண்டியதில்லை. அவ்வளவு வெளிப்படையான கொள்ளை. இப்படி, மக்களின் அடிப்படை தேவையான கல்வி, மருத்துவம் இரண்டையும் தனியாரிடம் தாரை வார்த்து விட்டு, "நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்று, அரசே விளம்பரப் படுத்தும் மது விற்பனையை மட்டும், அரசு வைத்திருப்பது தார்மீக ரீதியாகவே தவறு அல்லவா?
இரண்டாவது பிரச்னை: உலகம் முழுவதுமே சுதந்திர சந்தை கொள்கை நடைமுறைக்கு வந்து விட்டது. அதாவது, ஒரு குடிமகன் எதை விரும்பு கிறானோ அதை வாங்கும் உரிமை அவனுக்கு இருக்க வேண்டும்.
தமிழர்களாகிய நமக்கு, மற்ற எல்லா விஷயத்திலும் இந்த உரிமை இருக்கிறது. காரிலிருந்து, கம்ப்யூட்டர் வரை, எதை வாங்க வேண்டும் என்றாலும், உலகின் ஆகச் சிறந்த "பிராண்ட்'ஐ ஒருவர் வாங்க முடியும். ஆனால், எனக்கு பிடித்த மதுபானத்தை மட்டும் திருட்டுத்தனமாக தான் வாங்கி, குடிக்க முடியும் என்றால் என்ன நியாயம்? மது அருந்தும் ஒருவர் என்ன குடிக்க வேண்டும் என்பதை அரசு தான் தீர்மானிக்க முடியும் என்றால், அது சர்வாதிகாரம் இல்லையா? ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி நடக்கலாமா?
தமிழ்நாட்டில் மட்டும் மது ஆரோக்கியத்துக்கும், குடும்பத்துக்கும் கேடாக இருக்கிறது என்றால், அது "டாஸ்மாக்' என்ற, சர்வாதிகார வினியோக முறையினால் தான் என்பது, என் கள ஆய்வின் முடிவு. ஏனென்றால், "ஓல்ட் மாங்க்' என்ற மதுவை, நான் "டாஸ்மாக்'கில் குடித்தால், மறுநாள் என் உடம்பின் பல பாகங்களில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. ஆனால், இதே மதுவை பாண்டிச்சேரியிலோ, பெங்களூரிலோ குடித்தால் அந்த வலி ஏற்படுவதில்லை. இதை நான் வேறு பலர் மூலமும் சோதித்துப் பார்த்தேன். இதே முடிவு தான். இந்தக் காரணத்தால் தான், நம் ஊரில், தெருமுனையில் குடிகாரர்கள் விழுந்து கிடக்கின்றனர்.
அப்போது, எந்த விதமான, "தரமான' மதுவை அரசு விற்கிறது என்று பாருங்கள். இந்த மதுவெல்லாம், தமிழக அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது, குறிப்பிடத்தக்கது.
மதுவின் தரம் ஒரு பக்கம் தமிழனை துவட்ட, அவன் குடிக்கவைக்கப்படும் விதம், அவனை பாதி மிருகமாக மாற்றுகிறது. மனிதர்கள் விலங்குகளை போல் நடத்தப்படும் இடம் ஒன்று உண்டு என்றால், அது "டாஸ்மாக்' தான்.
சென்ற நூற்றாண்டில், வெளிநாடுகளில் பெரு வியாதிக் காரர்களை ஊருக்கு வெளியே கொண்டு போய் தள்ளி விடுவார்கள். அவர்களின் வாழ்விடங்கள் இப்போதைய "டாஸ்மாக்' போலவே தான் இருக்கும்.
என் கள ஆய்வுக்காக "டாஸ்மாக்' சென்று அமர்ந்திருந்தேன். பின்னால் இருந்தவர், அங்கேயே ஒரு ஓரத்தில் நின்று சிறுநீர் கழித்தார். பார்த்தால், இத்தனை பேர் வரக் கூடிய இடத்தில் கழிப்பறை வசதி கூட இல்லை. தண்ணீர் கூட காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிட நாற்காலி இல்லை. நின்றே தான் குடிக்க வேண்டும்.
இதுவே, 20 ரூபாய் கொடுத்து காப்பி குடிக்கச் சென்றால், ஓட்டலில் ராஜ மரியாதை கொடுக்கிறார்கள். பத்து டம்ளர் தண்ணீர் குடித்தாலும் காசு கேட்பதில்லை. படு சுத்தமான கழிப்பறை. மின்விசிறி. ஆனால், 200 ரூபாய் கொடுத்து குடிப்பவர்களை அரசாங்கம் மிருகங்களை போல் நடத்துகிறது. அந்த "டாஸ்மாக்' சூழலே ஒருவருக்கு ஏதோ ஒரு கொலைபாதக செயலை செய்கிறோம் என்ற, குற்ற உணர்வை உருவாக்கி விடுகிறது.
அதனாலேயே, அந்த மட்டமான சரக்கை நிதானம் இல்லாமல், அவசர அவசரமாக குடித்து "டாஸ்மாக்' வாசலிலேயே விழுந்து விடுகிறான் தமிழன்.
பெங்களூரில், ஒரு "-ரெஸ்டாரன்ட்'டில் பார்த்தேன். குடும்பம் குடும்பமாக வருகின்றனர். குளிரூட்டப்பட்ட இடம். பணிவான பணியாளர்கள். குழந்தைகள் பழச்சாறு அருந்த, கணவர் பீர் குடிக்கிறார். சமயத்தில் மனைவியரும், கணவர்களுடன் சேர்ந்து கொள்கின்றனர். அதே உணவகத்தில், நாலைந்து இளைஞர்கள் அமர்ந்து, ஒயின் அருந்திக் கொண்டு இருந்தனர்.
நம் ஊரில் ஒயின் ஷாப் என்று பெயர் தானே தவிர, ஒயின் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த சத்தமும் இரைச்சலும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த இடம். இப்படி மது அருந்தும் இடத்தை நாகரிகமாக வைத்திருந்தால் தானே அங்கே வருபவர்களும் நாகரிகமாக இருப்பார்கள்?
இதுதொடர்பாக, இன்னொரு முக்கியமான பிரச்னை; மதுபானக் கடைகளை வைத்துக் கொண்டிருக்கும் அரசு, ஏன் கள்ளுக்கு மட்டும் தடை போட்டிருக்கிறது? கள் என்பது பூமி தாய் கொடுக்கும் பாலைப் போன்றது. பானையில் சுண்ணாம்பை தடவினால் பதனீர்; சுண்ணாம்பு தடவவில்லை என்றால் அது கள். பூமியில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கள்ளின் மீதான தடையை, இந்த அரசு உடனடியாக நீக்கினால்
பல்லாயிரம் குடும்பங்கள் நலம் அடையும்.
ஏனென்றால், மட்டமான மதுவை விட, கள் கேடு அல்ல. குடிப்பவருக்கு செலவும் கம்மி. ஆனால், தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ எந்த அரசாக இருந்தாலும், "டாஸ்மாக்'குக்கான மது உற்பத்தியை சில தனியார் நிறுவனங்கள்தான், தம் கையில் வைத்திருக்கின்றன; அவர்கள்தான், தங்களின் சுயநலத்துக்காக கள் தடை செய்யப்பட காரணமாக இருக்கின்றனர் என்று, புலனாய்வுப் பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டே இருக்கிறது.
இது உண்மையானால், மக்கள் நலனுக்கு விரோதமான இந்த முடிவு, ஒரு சிலரின் கைகளில் இருப்பது தடுக்கப்பட வேண்டும். இயற்கைஆன கள்ளுக்கு இருக்கும் தடை நீக்கப்பட வேண்டும். கேரளாவில் கள்ளுக் கடைகள் நட்சத்திர விடுதிகளை போல் நடத்தப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...