சென்னையில் உள்ள, 3,254 ஓட்டுச்சாவடிகளிலும் 'வெப்கேமரா' மூலம் ஓட்டுப்பதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதற்கான பணியில் ஆர்வமுள்ள மடிக்கணினி வைத்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, 16 சட்டசபை தொகுதிகளில், 3,254 ஓட்டுச்சாவடிகளும், 84 துணை ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அதில், 283 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, அடையாளம் காணப்பட்டு உள்ளன.
அந்த ஓட்டுச்சாவடிகளில், 'வெப்கேமரா' மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. தற்போது, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை 'வெப்கேமரா' மூலம் கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலகம் ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான பணிகளில் ஆர்வமுள்ள மடிக்கணினி வைத்துள்ள பள்ளி,
கல்லுாரி மாணவர்களை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் தேர்தல் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் மக்கள் அறிய வசதியாக மாநகராட்சியின் இணையதளத்தில் தேர்தலுக்கென ஒரு பிரத்யேக இணைப்பு http://election.chennaicorporation.gov.in ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக ஓட்டுப்பதிவை பதிவு செய்யும் பணிக்கு வர விரும்பும் மாணவர்கள் தங்கள் விவரங்களை சென்னை மாநகராட்சி தேர்தல் பிரத்யேக இணைப்பில் http://election.chennaicorporation.gov.in பதிவு செய்யலாம். அல்லது பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சென்னை மாநகராட்சி கணினி மையத்தில் நேரடியாக ஒப்படைக்கலாம். தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை இதற்கு பயன்படுத்த கூடாது.