2 தொகுதிகளில் 6,55,346 வாக்காளர்கள் 'ஆப்சென்ட்!'; தேர்தல் கமிஷனின் மெத்தனமே காரணம்

கோவை மற்றும் பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகளில், பெண் வாக்காளர்கள் குறைவாக வாக்களித்திருப்பது,
ஆளும்கட்சியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில், கோவை தொகுதியில் பெண்களை விட 17 ஆயிரத்து 722 ஆண் வாக்காளர்கள் அதிகமிருந்தனர்; பொள்ளாச்சி தொகுதியில், ஆண்களை விட 7964 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர்; ஆனால், இரு தொகுதிகளிலும் நடந்த ஓட்டுப்பதிவில், பெண் வாக்காளர்களின் பங்களிப்பு, ஆண்களை விட குறைவாகியுள்ளது.
கோவை தொகுதியிலுள்ள 8 லட்சத்து 68 ஆயிரத்து 696 ஆண் வாக்காளர்களில், 6 லட்சத்து 7,209 பேர், வாக்களித்துள்ளனர்; இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 487 பேர், ஓட்டுப்போடவில்லை; எட்டு லட்சத்து 50 ஆயிரத்து 974 பெண் வாக்காளர்களில், 5 லட்சத்து 67 ஆயிரத்து எட்டு பேர், வாக்களித்தனர்; 2 லட்சத்து 83 ஆயிரத்து 996 பெண்கள் தேர்தலில் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.ஒட்டு மொத்தமாக, இந்த தொகுதியில், 5 லட்சத்து 45 ஆயிரத்து 507 பேர், இந்த தேர்தலில் பங்கேற்கவில்லை; இது 32 சதவீதம். முந்தைய லோக்சபா தேர்தலில், 3 லட்சத்து 39 ஆயிரத்து 943 பேர் மட்டுமே, 'ஆப்சென்ட்' ஆகியிருந்தனர்; அதேநேரத்தில், 2009 லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்களை விட, இந்த தேர்தலில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 839 ஓட்டுக்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.இதேபோல, பொள்ளாச்சி தொகுதியிலுள்ள 13 லட்சத்து 80 ஆயிரத்து 868 வாக்காளர்களில், 3 லட்சத்து 71 ஆயிரத்து 380 பேர், இந்த தேர்தலில் பங்கேற்கவில்லை; இங்குள்ள 6 லட்சத்து 86 ஆயிரத்து 433 ஆண் வாக்காளர்களில், 5 லட்சத்து 13 ஆயிரத்து 80 பேரும், 6 லட்சத்து 94 ஆயிரத்து 397 பெண் வாக்காளர்களில், 4 லட்சத்து 96 ஆயிரத்து 402 பேரும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.இத்தொகுதியில், ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 353 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்களும் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். கடந்த தேர்தலில் இருந்ததை விட, இந்த தேர்தலில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 469 வாக்காளர்கள், இத்தொகுதியில் அதிகரித்திருந்தாலும், 2 லட்சத்து 38 ஆயிரத்து 9 ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாகப் பதிவாகியுள்ளன.
இவ்விரு தொகுதிகளிலுமே, தலா 3 சதவீதத்துக்கும் அதிகமாக பெண் வாக்காளர்கள், ஓட்டுப்பதிவில் பங்கேற்காமல் இருந்துள்ளனர். கோவை தொகுதியிலுள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும், 70 சதவீத ஆண்கள், ஓட்டுப் போட்டுள்ளனர்; பெண்கள், 66.63 சதவீதம் பேர் மட்டுமே, வாக்களித்துள்ளனர். குறிப்பாக, சூலுார் சட்டசபை தொகுதியில், 51 சதவீத பெண்கள், ஓட்டுப்பதிவைப் புறக்கணித்துள்ளனர்.இதே தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 77 சதவீதம் பேர், வாக்களித்துள்ளனர்; பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் தொகுதியில், 69 சதவீதம் ஆண் வாக்காளர்களும், 67 சதவீதம் பெண் வாக்காளர்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். பல்லடம் தொகுதியில், இது முறையே 75 மற்றும் 71 சதவீதமாகவுள்ளது.பொள்ளாச்சி தொகுதியில், 74.75 சதவீத ஆண் வாக்காளர்களும், 71.49 சதவீத பெண் வாக்காளர்களும், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர். இங்குள்ள 6 சட்டசபைத் தொகுதிகளிலும், 3லிருந்து 4 சதவீதம் வரை, பெண்களை விட ஆண் வாக்காளர்கள் கூடுதலாக ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.கோவை, பொள்ளாச்சி இரு தொகுதிகளிலும் சேர்த்து, 6 லட்சத்து 55 ஆயிரத்து 346 வாக்காளர்கள், ஓட்டுப்பதிவில் பங்கேற்கவில்லை; இதற்கு, தேர்தல் கமிஷனின் மெத்தனமே காரணமென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில், பல பகுதிகளில் கொத்துக் கொத்தாக வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன; துணை வாக்காளர் பட்டியல், பல ஓட்டுச்சாவடிகளில் இல்லை.அது மட்டுமின்றி, பெரும்பாலான பகுதிகளில், 'பூத் ஸ்லிப்'களை தேர்தல் கமிஷனுக்காகப் பணியாற்றிய அலுவலர்கள், வினியோகம் செய்யவே இல்லை; விடுபட்டவர்களுக்கு, ஓட்டுச்சாவடிகளில் இவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த 'ஸ்லிப்' கிடைக்காத வாக்காளர்கள் பெரும்பாலானோர், அங்கு சென்று அதை வாங்க விரும்பாமல், வீட்டிலேயே முடங்கிவிட்டனர்.
இலைக்கு எதிராக அலை? : ஓட்டுப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், பெண் வாக்காளர்களில் பலர், விலையில்லாத் திட்டங்களுக்காக ஆளும்கட்சிக்கு வாக்களித்ததாகவும், ஆண் வாக்காளர்கள் பெரும்பாலும், ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களித்ததாகவும் தெரிவித்தனர்; ஆனால், இரு தொகுதிகளிலும் பெண்களின் ஓட்டுக்கள் குறைந்திருப்பது, ஆளும்கட்சியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...