தமிழகத்தில் கோழி கழிச்சல், வெப்ப தாக்குதலால் பண்ணை கோழிகள் பலியாகி வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களிலுள்ள ஏராளமான கோழி பண்ணைகளில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளவிற்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக இங்குள்ள பண்ணை களில் கோழி இறப்பு அதிகரித்து வருகிறது. கடும் வெயிலால் கோழிகள் ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்ப முடக்குவாத நோயினால் இறப்பதாக தெரியவந்துள்ளது.மொத்த கறிக்கோழி உற்பத்தியில் 1 முதல் 2 சதவீத கோழிகள் இறப்பது வழக்கமானதாகும். தினமும் 500 கோழி உற்பத்தி செய்யப்படும் பண்ணைகளில் 5 முதல் 10 கோழி இறந்து விடும். ஆனால் வெயில், கழிச்சல் நோயினால் 20 முதல் 25 கோழிகள் இறப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இதனால் உற்பத்தியும் பாதிப்பதாக அவர்கள் சுட்டிகாட்டினர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வெயில் தாக்கம் அதிகமாகும் போது, பண்ணைகளில் கோழிகளுக்கு வைக்கப்படும் தண்ணீர் வெயிலால் சூடாகி விடும். அந்த தண்ணீர் கோழிகளின் தாகத்தை தீர்க்காது.வெயில் அதிகமாக இருக்கும் போது கோழிகள் போதுமான தீவனங்களை சாப்பிடாது. இதனால் பலகீனமாகி, வெப்ப தாக்குதலில் எளிதில் இறந்து விடும். பண்ணைகளை சுற்றி வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் சணல் பைகளை தொங்க விட்டு அதில் நீர் தெளிக்கவேண்டும். பண்ணை கூரைகளிலும் நீர் தெளிக்கலாம். கோழிகளுக்கு ஸ்பிரேயர் நீர் தெளித்து வெப்பத்தை கட்டுப்படுத்தி, கோழிகளின் இறப்பு சதவீதத்தை குறைக்கலாம்’ என்றனர்.