அரசு பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரசு பள்ளிக் கட்டடங்கள் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, அவர்களின் அட்டகாசத்தால் கட்டடங்கள்
பாழடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிகளில் இரவு நேரக்காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் தஞ்சமடையும் சமூக விரோதிகள், அசுத்தம் செய்தல், வகுப்பறைகளை சேதப்படுத்துதல், குடிநீர் குழாய்களை உடைப்பது போன்றவற்றை அரங்கேற்றுகின்றனர்.
காலையில் ஆர்வத்துடன் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வகுப்பறைகளில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்களால் வேதனையடைகின்றனர். உடுமலையில் கல்லாபுரம், பூலாங்கிணறு போன்ற கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு எதிர்காலமாக விளங்கும் அரசுப்பள்ளிகள் பாதுகாப்பு வசதிகள் இல்லாத அவல நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர், சிறந்த வகுப்பறைகள், அடிப்படை கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சில சமூக விரோதிகள் வார விடுமுறை நாட்களில் சேதப்படுத்தி வந்தனர்.
பொதுமக்கள் தொடர் புகார் அளித்து வந்ததால், இரவு நேர போலீசார் கண்காணித்து வந்தனர். பள்ளி விடுமுறை நாட்கள் ஆரம்பமாகியுள்ளதால் சமூக விரோதிகளின் அட்டகாசங்கள் மீண்டும் நிகழவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுக்க, பாதுகாப்பில்லாத பள்ளிகளுக்கு தற்காலிக இரவுக்காவலர்களும், இரவு நேர காவல் கண்காணிப்பும் அவசியம் என ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
உடுமலை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் படிப்பிற்கு ஆதாரமாக விளங்குவது அரசுப் பள்ளிகள்தான். அடிப்படை வசதிகளை மேம்படுத்தாவிடிலும், அவற்றை சேதமடையாது பாதுகாக்க வேண்டும். கடந்த ஓராண்டாக சில பள்ளிகள், சுற்றுப்புறத்திலுள்ள சில நபர்களால் அசுத்தமாவது மட்டுமின்றி, பாதுகாப்பு வசதிகளை இழந்து வருகிறது. வார விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், வீண் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற செயல்களுக்கு மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருப்பது பெற்றோரிடத்து, அரசு பள்ளிகளின் மீது அதிருப்தியினை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்களுக்கும் வேதனை அளிக்கிறது. இரண்டு நாட்கள் விடுமுறைகளிலே இந்த அவல நிலை ஏற்படுகிறது. ஒரு மாத விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறப்பதற்குள் முழுவதுமாகவே சிதைந்துவிடவும் கூடும்.
அதனால், பாதுகாப்பில்லாத அரசுப்பள்ளிகளுக்கு தற்காலிக பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தினால் மட்டுமே இந்த பிரச்னையை தடுக்க முடியும். மாவட்ட நிர்வாகம் இந்த கல்வியாண்டிலாவது இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும். இப்பிரச்னை தொடர்ந்தால் கிராமபுற ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...