எண்ணிக்கையின்போது, பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களிலேயே வெப்-கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
தேர்தல் முடிவு தாமதம் ஏன்? கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மாநிலத்தில் 52,158 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை 60,817-ஆக உயர்ந்துள்ளது. அதாவது 8,659 வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், 1.30 கோடி பேர் புதிய வாக்காளர்களாக இணைந்துள்ளனர். வாக்குப் பதிவு சதவீதமும் உயர்ந்துள்ளது. வாக்குகளை எண்ணும் போது வழக்கமான சுற்றுகளுடன் மேலும் இரண்டு சுற்றுகள் எண்ணப்படும். வேட்பாளர்கள் அதிகமாகப் போட்டியிட்ட தொகுதிகளில் எண்ணுவதற்கு மேலும் நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
இதனால், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஓரளவு தாமதம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பிரவீண்குமார் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
மறு வாக்குப் பதிவு உண்டா? ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தொகுதியின் பொதுப் பார்வையாளரே முடிவு செய்வார். வேட்பாளர்கள் தெரிவிக்கும் அதிருப்தி, வாக்குச் சாவடி அதிகாரியின் தவறான செயல்பாடுகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடத்த வாய்ப்பு இருக்கிறது.
ஆனாலும், பொதுப் பார்வையாளர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மறுவாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடும். அதற்கான அறிவிப்பு தில்லியில் இருந்தே வரும்.
வெப்-கேமரா, கட்டுப்பாட்டு அறை: தமிழகத்தில் 42 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன. அவை அனைத்தும் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களின் செயல்பாடுகளை நேரலையாக பார்வையிடவும் தேர்தல் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் தனியாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் மொத்தம் 14 மேசைகள் போடப்படும். ஒரு மேசையில், வாக்கு எண்ணுவதை கண்காணிக்கும் அதிகாரி, உதவியாளர், நுண்பார்வையாளர், உதவியாளர் ஒருவர் இருப்பார். தேர்தல் நடத்தும் அதிகாரி, நுண்பார்வையாளர், கம்ப்யூட்டர் உதவியாளர் என அவர்கள் தனியாக இருப்பார்கள். ஒவ்வொரு சுற்றும் முழுமையாக முடிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்று தொடங்கப்படும்.
தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு முன்பாக 10 சதவீத அளவுக்கு வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்படவில்லை. சில இடங்களில் இது தொடர்பாக புகார்கள் கூறப்பட்டன. இதனால்தான் வாக்காளர்கள் வாக்களிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.
தேர்தல் வழக்குகள்: மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் மீது தேர்தல் நடத்தை நெறிமுறைகள் வாபஸ் பெறப்படும் தேதியான மே 16-க்குள்ளாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான கடிதமும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வாக்குக்கு பணம் கொடுத்தது உள்பட பல்வேறு புகார்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 30 நாள்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது ஜூலை 15-ஆம் தேதிக்குள் அவர்கள் தங்கள் கணக்குகளை அளிக்க வேண்டும்.
இதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த செலவுக் கணக்கு பார்வையாளர்கள் தமிழகம் வருவார்கள். அவர்கள் வேட்பாளர்கள் அளித்துள்ள செலவு கணக்குளை, தாங்கள் வைத்துள்ள கணக்குகளுடன் ஒப்பிடுவார்கள். செலவுக் கணக்கில் மாறுபாடு இருந்து அதனை வேட்பாளர் ஏற்கவில்லையென்றால் தேர்தல் ஆணையம் இறுதி நடவடிக்கை எடுக்கும்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உரிய முறையில் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யாவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்றார் பிரவீண்குமார்.
"நடத்தை நெறிமுறைகள் தொடர்கிறது'
சென்னை, ஏப். 25: மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்கிறது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மார்ச் 5-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு கடந்த 24-ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், நடத்தை நெறிமுறைகள் தொடர்கிறது. முதல்வரும், அமைச்சர்களும் தங்களது அரசு வாகனங்களை அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் அல்லது சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலகத்துக்குச் செல்ல மட்டுமே வாகனங்களை பயன்படுத்த வேண்டும். மற்ற இடங்களுக்குச் செல்ல பயன்படுத்தக் கூடாது. வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தை நெறிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்படுவது வழக்கம். அதுகுறித்த அறிவிப்புகள் ஓரிரு நாள்களில் வெளியாகும்.
தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை மே 16-ஆம் தேதி நடைபெறுவதால் அதற்குப் பிறகு உடனடியாக நடத்தை நெறிமுறைகளை விலக்கிக் கொள்வதற்கான அறிவிப்பை ஆணையம் வெளியிடும் என்றார் பிரவீண்குமார்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் எப்போது?
சென்னை, ஏப். 25: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை தேர்தல் முடிவுக்குப் பிறகு அளிக்கலாம் என்று பிரவீண்குமார் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மார்ச் 25-ஆம் தேதிவரை, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனாலும், சென்னை போன்ற நகரங்களில் வாக்குப்பதிவின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் தங்களது இயல்பான பணியைத் தொடங்குவார்கள்.
எனவே, மே 16-ஆம் தேதிக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பங்களை அளிக்கலாம். மாவட்டங்களில் தாசில்தாரிடமும், சென்னை போன்ற பெருநகரங்களில் மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று பிரவீண்குமார் தெரிவித்தா